Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சென்னையில் ரவுடி ஓடஓட வெட்டிக் கொலை: 3 பேர் கைது!

சென்னையில் ரவுடி ஓடஓட வெட்டிக் கொலை: 3 பேர் கைது!

சென்னை அடையாறு இந்திரா நகரில், ரவுடி மைத்திரேயன் என்பவர் மர்ம நபர்களால் நடுரோட்டில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொலை தொடர்பாக மூன்று பேரைக் கைது செய்துள்ள தனிப்படை போலீசார், அவர்களை ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை மயிலாப்பூர் ராமகிருஷ்ணபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மைத்திரேயன். சி-பிரிவு ரவுடியாகக் காவல்துறையினரால் வகைப்படுத்தப்பட்ட இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 21ஆம் தேதி சிறையிலிருந்து வெளியே வந்த அவர், மறுநாள் முதல் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் தினமும் காலை 10.30 மணிக்கு ஆஜராகிக் கையெழுத்திட்டு வந்துள்ளார்.

மயிலாப்பூர் ராமகிருஷ்ணபுரம் மற்றும் ராயபுரம் பகுதிகளில் மைத்திரேயனுக்கு எதிரிகள் அதிகம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அவர் வெவ்வேறு பகுதிகளில் மாறி மாறித் தங்கியிருந்துள்ளார். காவல் நிலையத்தில் கையெழுத்திடுவதற்காக மட்டும் தனது தந்தையுடன் ஆட்டோவில் மயிலாப்பூர் காவல் நிலையத்துக்கு வந்து செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

இந்நிலையில், இன்று காலை வழக்கம்போல் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டுவிட்டு, தனது தந்தையுடன் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அடையாறு இந்திரா நகர் வாட்டர் டேங்க் அருகே சென்றபோது, அங்கு வந்த மர்ம கும்பல் ஆட்டோவை வழிமறித்து மைத்திரேயனைச் சுற்றிவளைத்துள்ளது.

தொடர்ந்து, அவரது தந்தையின் கண் முன்னேயே மைத்திரேயனை அந்தக் கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. பட்டப்பகலில் நடைபெற்ற இந்தக் கொலை அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, சம்பவ இடத்தில் விசாரணை நடத்திய போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். மேலும், மயிலாப்பூர் ராமகிருஷ்ணபுரம் பகுதியில் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில், இந்தக் கொலையில் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் மூன்று பேரைக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரையும் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடைபெற்றதா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொலைக்கான காரணம் மற்றும் இந்தச் சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது விசாரணையின் முடிவில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!