Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார்.

திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் இன்று குரு பெயர்ச்சி விழா

ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம்

தஞ்சாவூர், மே.26-
தஞ்சாவூர் அருகே உள்ள திட்டையில் வசிஷ்டேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. தமிழகத்தின் தொன்மையான கோவில்களில் ஒன்றான இந்த கோவில் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற கோவிலாகும். வசிஷ்ட முனிவரால் பூஜிக்கப்பட்டதால் வசிஷ்டேஸ்வரர் சுயம்புவாக தோன்றியதால், தான் தோன்றீஸ்வரர் என்ற பெயர் கொண்டவர். இத்தகையை சிறப்பு பெற்ற இந்த கோவிலில் நவக்கிரகங்களில் சுபகிரகமான குருபகவான் எங்கும் இல்லாத சிறப்போடு சுவாமிக்கும், அம்மனுக்கும் இடையில் தனி சன்னதியில் ராஜகுருவாக எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார்.
குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆவது குருபெயர்ச்சியாகும். அதன்படி இந்தாண்டு குரு பெயர்ச்சி விழா இன்று காலை நடைபெற்றது.
குரு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு அதிகாலையில் இருந்தே தஞ்சை மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிய தொடங்கினர். நேரம் செல்ல செல்ல பக்தர்களின் கூட்டம் அதிகரித்த வண்ணம் இருந்தது. பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக
பல்வேறு இடங்களில் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டன. குரு பகவானை தரிசிக்க நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர்.
சரியாக இன்று காலை 11 மணிக்கு குரு பகவான் மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். அப்போது குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. பின்னர் குருபகவான் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார் .
ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று குருபகவானை தரிசித்தனர் .
இந்த விழாவில் இந்து சமய அறநிலையத்துறை மண்டல ஆணையர் ஜோதிலட்சுமி , உதவி ஆணையர் கார்த்திகேயன், வருவாய் கோட்டாட்சியர் நித்யா, தாசில்தார் சிவக்குமார் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டிருந்தனர்.
குரு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம்,துலாம், தனுசு மற்றும் கும்ப ராசிகாரர்கள் பரிகாரம் செய்து கொள்ள ஜூன் 3 -ம் தேதி ஒரு நாள் ஏகதின லட்சார்ச்சனையும், ஜூன் 5 -ம் தேதி முதல் 7 -ம் தேதி வரை சிறப்பு பரிகார ஹோமமும் நடைபெறவுள்ளது. இந்த ஹோமங்களில் நேரில் கலந்து கொள்ளும் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் சங்கல்பம் செய்து அர்ச்சனை செய்து பரிகாரம் செய்யப்படும்.
நேரில் வர‌ முடியாத பக்தர்கள் தங்களது பெயர், ராசி, நட்சத்திரம், லக்னம் ஆகிய முழு விவரங்களுடன் ( செல்போன் எண் உள்பட) கட்டணத்தை மணியார்டர் மூலமாகவோ , டி.டி. எடுத்து கோவில் முகவரிக்கு 6-ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று கோவில் செயல் அலுவலர் அசோக்குமார், தக்கார் சிவக்குமார் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!