Skip to content
Home » காயல்பட்டினத்தில் 200 ஆண்டுகளில் இல்லாத மழை- வெள்ளம், போக்குவரத்து துண்டிப்பு

காயல்பட்டினத்தில் 200 ஆண்டுகளில் இல்லாத மழை- வெள்ளம், போக்குவரத்து துண்டிப்பு

தூத்துக்குடி, குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென்மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் அதிகனமழை வெளுத்து வாங்கி வருகிறது.இந்நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 93.2 செ.மீட்டர் அதிகனமழை பெய்துள்ளது. இது வரலாறு காணாத மழை என  அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு அடுத்தபடியாக திருச்செந்தூரில் 67.9 செ.மீ மழை பெய்துள்ளது. ஸ்ரீவைகுண்டத்தில் 61.8 செ.மீ மழை பெய்துள்ளது. கனமழை காரணமாக தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.  தூத்துக்குடி மாவட்டத்தின் தூத்துக்குடி மாநகர், ஆத்தூர், ஏரல், திருச்செந்தூர், காயல்பட்டினம், உடன்குடி, ஆறுமுகநேரி, குலசேகரபட்டினம், ஸ்பிக் நகர் உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. அதேபோல், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

பாளையங்கோட்டை,  வண்ணாரப்பேட்டை,  கொக்கிரக்குளம் ஆகிய இடங்களில் வெள்ளம்  3 அடி உயரத்திற்கு சாலைகளில் ஓடுகிறது. நெல்லையையும், பாளைங்கோட்டையையும் பிரிக்கும் தாமிரவரணி ஆற்று பாலத்தின் மேல் 2 அடி உயரத்திற்கு வெள்ளம் ஓடுகிறது . இதனால் போக்குவரத்து  துண்டிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம்  ஆலங்குளத்திலும்  வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்குள்ளும்  வெள்ளம் புகுந்தது.

கனமழையால் பொதுமக்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு இரவு நேற்று இரவு வரை மழை விடாது பெய்ததால்  தென் மாவட்டங்களில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பி வழிகிறது. இதனால் தாமிரவரணி ஆற்றில் வினாடிக்கு 1 லட்சம் கனஅடி வீதம் வெள்ளம் பாய்ந்தோடுகிறது. நெல்லை . தூத்துக்குடி மாவட்டத்தில்  200 ஆண்டுகளில் இல்லாத அளவு  தற்போது மழை, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை முதல் மழை விருதுநகர் மாவட்டம், ராமநாதபுரம் மாவட்டங்களுக்கும் பரவியுள்ளது. இதனால் அங்கும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.  இதனால்   நெல்லை,  உள்பட 5 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், விருதுநகர், ராமநாதபுரம், தேனி  மாவட்டங்களில்  பள்ளிகளுக்கு மட்டும்  விடுமுறை விடப்பட்டுள்ளது  . திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகாவில்  மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு முகாமிட்டு வெள்ள நிவாரணப்பணிகளை  செய்து வருகிறார். இதுபோல தூத்துக்குடி மாவட்டத்தில் அமைச்சர் கீதா ஜீவன் இன்று கொட்டும் மழையில் மீட்புபணிகளில் ஈடுபட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!