Skip to content
Home » இந்திய வீரர்களை கெடுத்த ஐபிஎல்…. கபில்தேவ் குமுறல்

இந்திய வீரர்களை கெடுத்த ஐபிஎல்…. கபில்தேவ் குமுறல்

  • by Senthil

இந்திய கிரிக்கெட் அணி வரும் நாட்களில் ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பை போன்ற பெரிய தொடர்களில் விளையாட உள்ளது. அதேவேளையில் இந்திய அணியில் முன்னணி வீரர்களான ஜஸ்பிரித் பும்ரா, கே.எல். ராகுல், ரிஷப் பந்த் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் காயத்தில் இருந்து மீண்டு வருவதற்கான பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் இன்னும் 100 சதவீதம் உடற்தகுதியை எட்டியதாக தெரியவில்லை. அதில் ரிஷப் பந்த் அணிக்கு திரும்ப நீண்ட காலம் ஆகும் என தெரிகிறது.

இந்நிலையில் இந்திய அணி நிர்வாகம் அவர்களுக்கு மாற்றாக இளம் வீரர்களை அடையாளம் காணும் முயற்சியில் இறங்கி உள்ளது. அதன் முதல் கட்டமாக தற்போது நடைபெற்று வரும் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை பயன்படுத்துகிறது. அதில் நடந்த முதல் போட்டியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் விதமாக ரோஹித் மற்றும் கோலி ஆகியோர் முன்வரிசையில் ஆடவில்லை. இலக்கு குறைவு என்றாலும் அதை எட்டி பிடிக்க 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. முடிவில் ரோஹித் களம் இறங்கிய பின் வெற்றி பெற்றது. மேலும் அந்த தொடரின் 2-வது போட்டியில் ரோஹித் மற்றும் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அந்த போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவி பெரும் விமர்சனத்திற்குள்ளானது.

இந்நிலையில் இந்திய அணியின் செயல்பாடுகள் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரும், 1983ல் இந்தியாவுக்காக முதல் உலக கோப்பையை வென்ற கேப்டனுமான கபில்தேவ், வீரர்களுக்கு ஏற்பட்ட காயங்களை இந்திய அணி நிர்வாகம் கையாளும் விதத்தை கடுமையாக விமர்சித்து உள்ளார். இந்திய அணி மூன்றாவது முறையாக உலக கோப்பையை வெல்ல முக்கிய வீரர்கள் தேவை என்பதை மனதில் வைத்து அணி நிர்வாகம் இன்னும் முனைப்புடன் இருந்திருக்க வேண்டும் என்று கபில் தேவ் கூறியுள்ளார்.

மேலும் அவர், ஜஸ்பிரித் பும்ரா காயத்தில் இருந்து மீண்டு பயிற்சியை தொடங்கி உள்ளார். ஆனால் அவர் முழு உடல்தகுதியை எட்டாவிட்டால் அது உலக கோப்பை தொடரை நிச்சயம் பாதிக்கும். அவருக்கு பதிலாக மாற்று வீரரை தேடாமல் இந்திய அணி நிர்வாகம் நேரத்தை வீணடிக்கிறது . நான் விளையாடிய நாட்களில் கடவுள் கருணையால் காய பிரச்சினைகளை எதிர்கொண்டதில்லை .

ஐபிஎல் தொடர் சிறந்தது தான். ஆனால் சில சமயங்களில் அது உங்களை கெடுத்துவிடும்  இந்திய வீரர்கள் ஐபிஎல் தொடரில் சிறிய காயங்களுடன் கூட விளையாடுகிறார்கள். ஆனால் சர்வதேச போட்டியின் போது காயம் ஏற்பட்ட உடனே வீரர்கள் ஓய்வை தேர்வு செய்கிறார்கள். மேலும் முக்கியமான போட்டிகளை இழக்கிறார்கள். இப்போது வீரர்கள் வருடத்தில் 10 மாதம் விளையாடுகிறார்கள். அது அவர்களுக்கு பணிச்சுமையை அதிகரிக்கும். இதனால் இந்திய கிரிக்கெட் வாரியம், வீரர்கள் ஆண்டு முழுவதும் விளையாடும் போட்டிகளின் அளவை ஆராய வேண்டும் என்றும் கபில்தேவ் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!