Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஹார்முஸ் நீரிணையில் ஈரான் தாக்குதல்-இந்தியர் ஒருவர் பலி; 8 பேர் காயம்

ஹார்முஸ் நீரிணையில் ஈரான் தாக்குதல்-இந்தியர் ஒருவர் பலி; 8 பேர் காயம்

துபாய்: ஹார்முஸ் நீரிணையில் தங்களின் மொம்பாசா, அல் பஹியா ஆகிய இரண்டு கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் ஒரு இந்தியர் உயிரிழந்ததாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது.

ஹார்முஸ் நீரிணையின் ஓமானிய கடற்பரப்பில் வைத்து இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளது. ஐக்கிய அமீரகத்திற்கு சொந்தமான மொம்பாசா கப்பலில் இருந்த இந்திய மாலுமி, இந்த தாக்குதல் சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவர் எந்த மாநிலத்தை சேர்ந்தவர் என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

இந்த தாக்குதலில் 8 பேர் காயமடைந்துள்ளதாக அமீரகம் தெரிவித்துள்ளது. அதில் 6 பேர் இந்தியர்கள் எனவும், 2 பேர் உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவர்கள் எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் நால்வரின் நிலை மோசமாக இருப்பதாக அமீரகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஐக்கிய அமீரகத்தின் பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஓமான் கடற்பரப்பின் ஹார்முஸ் நீரிணையில் ஈரான் ஏவுகணைகள் தாக்கியதில், மொம்பாசா மற்றும் அல் பஹியா என்ற இரு ஐக்கிய அரபு அமீரக கப்பல்கள் பாதிப்புக்குள்ளானது. இதில் ஒரு இந்தியக் கப்பல் பணியாளர் உயிரிழந்தார். 6 இந்தியர்கள் உள்பட 8 பேர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலால் கப்பல்களுக்குப் பொருள் சேதம் ஏற்பட்டு, தீ விபத்துக்கள் ஏற்பட்டன. ஆனால், பணியாளர்கள் வேகமாக செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்” இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கடும் கண்டனங்களை தெரிவித்திருக்கும் ஐக்கிய அரபு அமீரகம், இது சர்வதேச போர்ச் சட்டங்களை மீறும் செயல் எனவும் எச்சரித்திருக்கிறது. மேலும், “உயிரிழந்த குடும்பத்திற்கு எங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம். காயமடைந்து சிகிச்சைப்பெற்று வரும் இந்தியர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறோம்” என்றும் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் தனது ட்ரூத் சோசியல் பக்கத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெளியிட்டிருந்த பதிவில், “ஈரான் ஒத்துழைத்தாலும் இல்லாவிட்டாலும், ஹார்முஸ் நீரிணை திறந்தே இருக்கும். ஈரான் மீதான கடல்வழி தாக்குதலை அமெரிக்கா தொடரும். அமெரிக்கா தான் ஹார்முஸ் நீரிணையின் மெய்காப்பாளன். தற்போதைய கட்டணத்தில் இருந்து வெறும் 20% தொகையை மட்டுமே செலுத்தி, ஹார்முஸ் நீரிணையை கப்பல்கள் பாதுகாப்புடன் கடந்து செல்லலாம். இதற்கான உத்தரவாதத்தை அமெரிக்கா வழங்கும்” என்று திங்கட்கிழமை (ஜூலை 13) உறுதி அளித்திருந்தார்.

இந்நிலையில், அமீரகத்தின் இரு சரக்கு கப்பல்கள் மீதான தாக்குதல் சம்பவமானது அரங்கேறியுள்ளது. கடந்த பிப்ரவரி 26, 2026 அன்று இஸ்ரேல், அமெரிக்கா இணைந்து ஈரான் மீது போர் தொடுத்த நிலையில், அதை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில், 14 அம்ச கோரிக்கைகள் அடங்கிய போர் நிறுத்த உடன்படிக்கையை டிரம்ப் முன்மொழிந்தார்.

இதை ஏற்று கடந்த ஜூன் 17-ஆம் தேதி (இந்திய நேரப்படி ஜூன் 18)  அமெரிக்கா – ஈரான் நாடுகள், போர் நிறுத்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டன. இந்த சூழலில், இரு நாடுகளுக்கு இடையில் மீண்டும் போர் வெடித்து, போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதாக ஜூலை 8-ஆம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, இரு நாடுகளும் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஹார்முஸ் நீரிணையில் பதற்றமாக சூழல் நிலவுகிறது. தற்போது, 2 சரக்கு கப்பல்கள் மீது நடத்தப்பட்டிருக்கும் தாக்குதல், கச்சா எண்ணெய் விலையை மேலும் உயர்த்தும் என்ற அச்சத்தை எழச் செய்துள்ளது. சமீபத்திய மாலுமியின் இழப்பும், இந்திய மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

error: Content is protected !!