Skip to content
Home » அசதியில் தண்டவாளத்தில் தூங்கிய 3 வாலிபா்கள் ரயிலில் அடிபட்டு பலி..

அசதியில் தண்டவாளத்தில் தூங்கிய 3 வாலிபா்கள் ரயிலில் அடிபட்டு பலி..

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள உப்பூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருவிழா சிறப்பாக நடப்பது வழக்கம். இந்த ஆண்டு சித்திரை திருவிழா தொடங்கி நடந்து வந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக  காவடி எடுத்தல், சாமிவீதி உலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இரவு முழுவதும் நடந்தது. இந்த திருவிழாவை காண முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி மட்டுமின்றி நாகை, திருவாரூர் மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். முத்துப்பேட்டை அருகே உள்ள உப்பூர் மெயின் ரோட்டை சேர்ந்த முருகதாஸ் மகன் அருண்குமார்( 17), கோபாலசமுத்திரத்தை சோ்ந்த கந்தசாமி மகன் பரத்குமார்(17), நாகை மாவட்டம் மேலமருதூர் தெற்கு பிடாரி கிராமத்தை சேர்ந்த முருகையன் மகன் முருகபாண்டியன் (20) ஆகிய 3 பேரும் காவடி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். ஊர்வலம் முடிந்த பின்னர் இவர்கள் 3 பேரும் கோவில் அருகே உள்ள ரெயில் தண்டவாளத்தில் படுத்து தூங்கினர். நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் சென்னை தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் இந்த தண்டவாளத்தின் வழியாக வந்தது. திருவிழா ஊர்வலத்தில் பங்கேற்ற களைப்பில் அயர்ந்து தண்டவாளத்தில் படுத்து தூங்கி கொண்டிருந்த வாலிபர்களால் ரெயில் வந்த சத்தத்தை கேட்க முடியவில்லை. இதனால் தண்டவாளத்தில் தூங்கிக்கொண்டு இருந்த அருண்குமார், பரத்குமார், முருகபாண்டியன் ஆகிய 3 பேரும் ரெயிலில் அடிபட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே அருண்குமார், முருகபாண்டியன் ஆகிய இருவரும் உடல் நசுங்கி பலியானார்கள். படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பரத்குமாரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரத்குமாரும் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன், இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தீவிர விசாரணை நடத்தினர். கோவில் திருவிழாவில் பங்கேற்க வந்த 3 வாலிபர்கள் ரெயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!