Skip to content
Home » பொருநை அருங்காட்சியம்….18ம் தேதி அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர் ஸ்டாலின்

பொருநை அருங்காட்சியம்….18ம் தேதி அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர் ஸ்டாலின்

நெல்லை: கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த சட்டசபை கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன்படி நெல்லை மாநகரில் பொருநை நாகரிகத்தை மையப்படுத்தி பொருநை நாகரிகத்தின் அடிநாதமாக இருக்கும் தாமிரபரணி ஆற்றின் கரையில் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் ஆதிச்சநல்லூர், கொற்கை, சிவகளையில் அகழாய்வு மூலம் கிடைத்த பல்வேறு பொருட்களை காட்சிப்படுத்தும் வகையில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று அவர் அறிவித்தார். இதனைத்தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் நெல்லையில் அருங்காட்சியகம் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யும் பணியில் தொல்லியல் துறை அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் பாளை கே.டி.சி. நகரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் 4 வழிச்சாலையில் ரெட்டியார்பட்டி மலைப்பகுதியில் பொருநை அருங்காட்சியகம் அமைக்க முடிவு செய்து அந்த இடத்தை அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மொத்தம் ரூ.15 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள இந்த அருங்காட்சியகத்திற்கு 13 ஏக்கர் பரப்பளவில் இடம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. உலகத்தரத்தில் அமைய உள்ள இந்த அருங்காட்சியகத்தில் அகழாய்வு மூலம் கிடைத்த பொருட்கள் பார்வைக்கு வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி கொற்கையில் 812 பொருட்கள், ஆதிச்சநல்லூரில் 1,620 பொருட்கள், சிவகளையில் 185 பொருட்கள் என 2,617 பொருட்கள் அகழாய்வு மூலம் கண்டறியப்பட்டு உள்ளது. மேலும் 106 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டு உள்ளன.

மேலும் 3 இடங்களில் கிடைத்துள்ள வளையல்கள், பாசிமணிகள், சுடுமண் பொம்மைகள், இரும்பு, தாமிரத்தாலான பொருட்கள், நாணயங்கள், பல்வேறு வகையான பானை ஓடுகள், வெளிநாடுகளுடன் தமிழர்களின் தொடர்புகள் குறித்த பொருட்களும் இங்கு காட்சிப்படுத்தப்படுகிறது. அருங்காட்சியகமாக மட்டுமல்லாமல் இதை சுற்றுலாத் தலமாக பயன்படுத்தும் வகையில் அமைய இருக்கிறது. இது நெல்லையின் அடையாளமாக திகழும். தமிழரின் அடையாளத்தை உலக மக்களுக்கு எடுத்துச்செல்லும் வகையில் அமைய உள்ள இந்த அருங்காட்சியகத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நாளை மறுநாள் (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைக்க உள்ளார். இதன் அருகில் உயரமான பகுதியில், மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ‘வியூ பாயிண்ட்’ அமைக்கப்பட உள்ளது. இங்குள்ள தொலைநோக்கி மூலம் நெல்லையின் அழகை பார்க்கும் வசதி கிடைக்கும். எனவே இது பொருட்களை மட்டும் வைக்கும் இடமாக இல்லாமல், அனைவரும் வந்து செல்லும் இடமாக அமைக்கப்பட உள்ளது. மேலும் இங்கு மூலிகை தோட்டங்கள், கைவினைப் பொருட்கள், கலை, கலாச்சார நடவடிக்கைகள், சுற்றுலாத்துறை மையங்கள், திறந்தவெளி திரையரங்கு என்று பல்வேறு அம்சங்களுடன் அருங்காட்சியக வளாகம் அமைக்கப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!