கூட்டுறவு கடன் தள்ளுபடி, சம்பா சாகுபடிக்கு மேட்டூரில் இருந்து கூடுதலாக தண்ணீர் வழங்க கர்நாடக அரசிடம் விலியுருத்த வேண்டும், குறுவை சாகுபடியை இழந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாய சங்கத்தினர் அக்டோபர் 21ம் தேதி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர்.
தஞ்சாவூரில் தமிழக சிபி எம், சிபிஐ, சிபி எம்.எல் விவசாய சங்கங்களின் மாநில நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், விவசாயிகளின் கூட்டுறவு பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், பழைய கடனை காரணம் காட்டாமல் புதிய பயிர்க்கடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
மேலும், காவிரி டெல்டா பகுதிகளில் சம்பா சாகுபடிக்கு தேவையான அளவு தண்ணீர் கிடைக்கவில்லை என்றும், மேட்டூரில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாய சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
குருவை சாகுபடியை இழந்த விவசாயிகளுக்கு உரிய வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், சம்பா சாகுபடிக்கு பயிர் காப்பீடு உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் அக்டோபர் 21-ஆம் தேதி தமிழகம் முழுவதும் சுமார் 500 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும், என விவசாய சங்க நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.
போராட்டத்தில் அனைத்து விவசாய சங்கங்களும், விவசாயிகளும் பங்கேற்க வேண்டும் என்றும் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
