கரூரில் அனுமதியின்றி செயல்பட்ட இரண்டு சாயப்பட்டறைகள் இடித்து அகற்றம் – அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை.
தமிழகத்தில் நீர்நிலைகளைப் பாதுகாக்கும் நோக்கில், கரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டு, மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளில் அதிகாரிகள் தொடர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, கடந்த 9ஆம் தேதி அமராவதி ஆற்றில் சுத்திகரிக்கப்படாத தொழிற்சாலைக் கழிவுநீர் வெளியேற்றப்படுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆற்றில் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்நிலையில், இன்று கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அமராவதி ஆற்றங்கரையோரம் உள்ள மாவடியான் கோவில் தெரு மற்றும் பாலம்மாள்புரம் பகுதிகளில் அனுமதியின்றி சாயப்பட்டறைகள் செயல்பட்டு வருவது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, சார் ஆட்சியர் வெங்கடேசன் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் தொல்காப்பியன் தலைமையிலான அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு, சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த இரண்டு சாயப்பட்டறைகளையும் இடித்து அகற்றி வருகின்றனர்.
சாயப்பட்டறைக்காக கட்டப்பட்டிருந்த தொட்டிகள் மற்றும் சாயப்பட்டறை கழிவுநீர் வெளியேற்ற இருந்த வழித்தடங்கள் அனைத்தையும் இடித்து அகற்றினர்.
மேலும், கரூர் மாவட்டத்தில் இனிவரும் காலங்களில் அனுமதியின்றி சாயப்பட்டறைகள் செயல்பட்டாலோ அல்லது சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் தொழிற்சாலைகள் இயங்கினாலோ சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
