தைலாபுரத்து பஞ்சாய்து எங்கே போய் முடியுமோ?
தமிழ்நாட்டில் 1982ல் எடுக்கப்பட்ட அம்பாசங்கர் கமிஷன் கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் மிகப்பெரிய சாதி வன்னியர் சாதிதான். இவர்கள் சேலம், தர்மபுரி, விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் அதிகமாக வாழ்கிறார்கள். 1980ல் வன்னியர்களுக்கென ஒரு சங்கம் தொடங்கப்பட்டது. டாக்டர் ராமதாஸ் இதற்கு காரண கர்த்தாவாக இருந்தபோதிலும், ஆரம்பத்தில் இதன் தலைவர் வன்னிய அடிகள் என்பவர் இருந்தார்.
மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்த வன்னியர்கள் தங்கள் முன்னேற்றத்துக்காக கல்வி, வேலை வாய்ப்பில் 20 சதவீத ஒதுக்கீடுகேட்டு 1987ல் ஒருவாரம் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் பெரும் வன்முறையாக மாறியது. அப்போது முதல்வர் எம்.ஜிஆர் உடல்நலம் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தார். போராட்டத்தில் 21 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
1989ல் திமுக ஆட்சிக்கு வந்தபோது தான் , அப்போதைய முதல்வர் கருணாநிதி, வன்னியர்களை உள்ளடக்கிய 108 சாதிகளுக்கும் சேர்த்து மாநிலத்தில் எம்.பிசியை உருவாக்கி, 20 சதவீத இடஒதுக்கீடும், மத்திய பணியில் 2 சதவீத இட ஒதுக்கீடும் அளித்தார்.
பின்னர் 1989ல் சென்னை சீரணி அரங்கில், பாட்டாளி மக்கள் கட்சி உருவானது. இதன் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தான். பேராசிரியர் தீரன், எடப்பாடி கணேசன், ஜி.கே. மணி, அன்புமணி ஆகியோர் இதுவரை இந்த கட்சியின் தலைவர்களாக இருந்து உள்ளனர். இப்போது ராமதாஸ் நான் தான் தலைவர், அன்புமணி செயல்தலைவர் என்று கூறி உள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சி 2001 சட்டமன்றத்தில் 20 எம்.எல்.ஏக்களையும், 2006ல் 18 எம்.எல்.ஏக்களையும் பெற்றிருந்த கட்சி. மக்களவையில் 1999, 2004ல் தலா 5 எம்.பிக்களை பெற்றிருந்த கட்சி. ஒரே நேரத்தில் 2 மத்திய அமைச்சர்களையும் பெற்றிருந்த கட்சி.
தற்போதைய நிலவரப்படி பாமகவுக்கு தமிழக சட்டமன்றத்தில் 5 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். அன்புமணியின் ராஜ்யசபா உறுப்பினர் பதவியும் ஜூலை மாதத்துடன் முடிவுக்கு வருகிறது.
இப்படி பாட்டாளி மக்கள் கட்சியின் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் குறைந்துபோனதற்கான காரணம் என்ன-? என்பது தான் இப்போது பாமகவில் எழுந்துள்ள கேள்வி. கூட்டணி அமைப்பதில் ஏற்பட்ட தோல்வி தான் இதற்கு காரணம் என்று ராமதாஸ் கருதுகிறார்.
சட்டமன்ற தேர்தல், மக்களவை தேர்தல் என இரண்டு தேர்தல்களிலும் பாமகவுக்கு கணிசமான பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை. அதே நேரத்தில் தங்களை விட பலம் குறைந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெறுகிறார்கள். இது எப்படி சாத்தியமாகிறது என்ற கேள்வியும் பாமகவில் புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் 2022 மே மாதம் நடந்த பொதுக்குழுவில் அன்புமணி கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அதன்பிறகு கட்சியின் முழு கட்டுப்பாடும் அவரது கைக்குள் சென்று விட்டது. கூட்டணி விவகாரத்தில் கூட தன்னுடைய கருத்துக்கு மதிப்பளிக்கப்படவில்லை என்று ராமதாஸ் கருதினார். தான் விரும்பாத கூட்டணியை அமைத்ததால் தான் இந்த நிலை என ராமதாஸ் கூறுகிறார்.
இதனால் தான் அன்புமணியை செயல் தலைவராக்கி விட்டு, மீண்டும் நானே தலைவர் என ராமதாஸ் அதிரடியாக அறிவித்தார். ஆனால் இந்த அறிவிப்பை அன்புமணி ஏற்கவில்லை. நானே தலைவர் என அவர் இப்போதும் உரிமை கொண்டாடுகிறார்.
கடந்த 11ம் தேதி நடந்த சித்திரை முழு நிலவு மாநாட்டில் தந்தையும், மகனும் கலந்து கொண்டனர்.அந்த மாநாட்டில் ராமாஸ் பேசிய பேச்சை அன்புமணியால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. கூட்டணி விவகாரத்தை நானே பார்த்துக்கொள்கிறேன் என்றார் ராமதாஸ். அதாவது வரும் 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை நானே முடிவு செய்வேன் என்று ராமதாஸ் சொல்கிறார்.
அதற்கு முன்னதாக அன்புமணி, பாமகவுடன் தான் கூட்டணி என்ற நிலைப்பாட்டை எடுத்து விட்டார். இது தான் இப்போது தந்தை, மகனுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதலுக்கு முக்கிய காரணம்.
இதற்கு முன்னதாக 2024 டிசம்பரில் புதுச்சேரியில் நடந்த சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் தந்தை, மகன் இடையே மேடையிலேயே மோதல் வெடித்தது. முகுந்தன்(ராமதாசின் மகள் வழி பேரன்) தான் இளைஞர் அணி தலைவர் என ராமதாஸ் அறிவித்தார். இதை ஏற்கமுடியாது என அன்புமணி மேடையிலேயே பதிலடியாக அறிவித்தார்.
இதை ஏற்க முடியாது என்றால் போ, இது என் கட்சி, இங்க நான் சொல்வதைத்தான் கேட்கணும் என ராமதாஸ் அதிரடி காட்டினார். இப்படியாக 1 வருடத்திற்கும் மேலாக தந்தை, மகன் இடையே கருத்து மோதல்கள் நாளுக்கு நாள் பூதாகரமாகி வருகிறது.
இதற்கு மூல காரணம் என்ன வென்று பார்த்தால், ராமதாஸ் பாஜக கூட்டணியை முற்றிலுமாக வெறுக்கிறார். கட்சியில் உள்ள மூத்த முன்னோடிகள் பெரும்பாலானவர்கள் ராமதாஸ் கருத்தை ஏற்கிறார்கள்.
அதே நேரத்தில் அதிமுகவுடன் நாம் நேரடியாக கூட்டணி பேசுவோம். அதிமுகவிடம் இருந்து பாஜக மொத்தமாக சீட்டுகளை பெற்று நமக்கு தரவேண்டுமா? நாம் என்ன அந்த அளவுக்கு குறைந்து விட்டோமோ என்று ராமதாஸ் கேட்கிறார்.
ஆனால் அன்புமணி, பாஜகவிடம் முற்றிலுமாக கட்சியை ஒப்படைத்து விட்டது போல போய்விட்டார். தமிழ்நாட்டில் பாஜக , நம்மை விட பெரிய கட்சியா? என்று ராமதாஸ் எழுப்பும் கேள்விக்கு அன்புமணியிடமே விடை இல்லை. பாஜகவிடம் போய் சரணடையும் அளவுக்கு என்ன நேர்ந்து விட்டது என்கிறார் ராமதாஸ்.
அதே நேரத்தில், பாஜக தான் மத்தியில் ஆளுங்கட்சி. அதனுடன் கூட்டணி சேர்ந்தால் தான் கட்சி நலனுக்கு நல்லது என அன்புமணி கூறுகிறார். இதை அந்த கட்சி இளைஞர்கள் தரப்பு ஆமோதிக்கிறது.
இப்படி ஏற்பட்ட கருத்து மோதல் இப்போது உச்சகட்ட மோதலாக உருவெடுத்து விட்டது. கடந்த 2 நாட்களாக தைலாபுதத்தில் ராமதாஸ் நடத்திய கூட்டத்தை அன்புமணி அடியோடு புறக்கணித்தார். அத்துடன் பெரும்பாலான நிர்வாகிகளும் அதை புறக்கணித்தனர்.
அதாவது கட்சி தன் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது என்பதை அன்புமணி, தனது புறக்கணிப்பு மற்றும் பெரும்பாலான நிர்வாகிகள் புறக்கணிப்பு மூலம் ராமதாசுக்கு சொல்லாமல், சொல்லிவிட்டார். இதனால் ராமதாஸ் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
அதாவது அன்புமணி கட்சியை விட்டு நீக்கப்பட்டு விட்டார். செயல் தலைவர் மற்றும் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அவரை ராமதாஸ் நீக்கி நடவடிக்கை எடுத்து விட்டார் என்ற பேச்சு கட்சியின் நிர்வாகிகள் மத்தியில் எழுந்தது. அதே நேரத்தில் இது வதந்தி. இது உண்மை இல்லை என கவுரவ தலைவர் ஜி.கே. மணி விளக்கம் அளித்து உள்ளார்.
டாக்டர் ராமதாஸ் காலத்திற்கு பிறகு, அன்புமணிக்காக உழைப்போம் தந்தையும், மகனும் விரைவில் சந்தித்து பேசுவார்கள். இந்த சலசலப்பு விரைவில் தீரும் என்றும் ஜி.கே. மணி கூறி உள்ளார்.
ஆக, தந்தை மகன் இடையே மட்டும் நடந்த மோதல், பின்னர் தைலாபுரத்திற்குள் பரவி, பொதுக்குழு வரை சென்று, பின்னர் சித்திரை மாநாட்டிலும் வெடித்திருக்கிறது. தைலாபுரத்து தந்தை மகன் பஞ்சாயத்து இப்போது டில்லி வரையிலும் எட்டிவிட்டது. அவர்களும் வேடிக்கை பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.
பொதுக்குழு மூலம் தலைவராக தேர்வு செய்யப்பட்ட தன்னை, கட்சி தலைவர் பதவியில் இருந்து சட்டப்படி நீக்க முடியாது என்று அன்புமணி தைரியமாக இருக்கிறாராம். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், தேர்தல் ஆணையம் மூலம் தனது தலைவர் பதவியை தக்கவைத்துக்கொள்ளவும் அன்புமணி தயாராகி வருகிறாராம்.
ஏற்கனவே மகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கு ஏற்பட்ட நிலை பாமகவுக்கும் வந்துவிடுமோ என்று பாமகவின் ஆரம்ப கால முன்னோடிகள் இப்போது அஞ்சுகிறார்கள். தைலாபுரம் பஞ்சாயத்து எங்கே போய் முடியுமோ என்று தொண்டர்கள் கவலையுடன் உள்ளனர்.