முடிவுக்கு வந்ததா தைலாபுரம் டிராமா?
தமிழக அரசியல் கடந்த பல வருடங்களாக திமுகவை சுற்றியே வந்து கொண்டிருக்கிறது. திமுக அரசின் திட்டங்கள், கல்வி வளர்ச்சி, மருத்துவத்தில் சாதனை, இப்படி ஒவ்வொரு நாளும் திமுக அரசு தனது செயல்பாட்டின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டதுடன், முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் செயல்திட்டங்கள் தமிழக அரசியலையும் தாண்டி அகில இந்திய அரசியலிலும் எடுத்துக்காட்டாக சொல்லக்கூடியவராக திகழ்கிறார் .
இதற்கு அடுத்ததாக அதிமுக தனது இருப்பைக்காட்டிக்கொள்ள எதையாவது செய்ய வேண்டும் என்ற நிலைமையில் ஏதேதோ செய்து பார்க்கிறது. ஆனால் அதிமுகவின் நேரம் ‘ மாவு விற்க போனால் காற்றடிக்கிறது. உப்பு விற்க போனால் மழை பெய்கிறது” என்பது போல நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே இருக்கிறது.
எனவே திமுகவை விமர்சித்தாவது, அரசியல் செய்ய அதிமுக முயற்சி செய்து கொண்டிருக்கிறது. பாஜகவுடன் கூட்டணி சேர்ந்ததால் அடுத்து நாம் தான் ஆட்சியை பிடிக்கப்போகிறோம் என்ற கனவில் தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்வதுடன் தொண்டர்களையும் ஏமாற்றிக்கொண்டிருக்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள்.
‘ஓட்டப்பானையில் எவ்வளவு தண்ணீர் ஊற்றினாலும் நிரம்பாது ‘ என்ற பழமொழி எடப்பாடிக்கு தெரியாமல் போனதில் ஆச்சரியமில்லை. காரணம் அதிமுக என்ற அழகிய பானையை ஓட்டை போட்டவரே அவர் தான். அதை அடைக்கவோ, புதுப்பிக்கவோ அவருக்கு மனமில்லை.
அதனால் தான் உள்கட்சியில் ஆயிரம் பூசல்களை வைத்துக்கொண்டு, கூட்டணிக்கு மன்னார்குடியில கேட்டாக……. மாயவரத்துல கேட்டாக….. சீமையில கேட்டாக என கதை அளந்து கொண்டு இருக்கிறார்.
தமிழ்நாட்டில் திமுக, அதிமுக தவிர மற்ற கட்சிகளின் செயல்பாடுகளை தமிழக மக்கள் பெரிதாக கவனிப்பதில்லை. தமிழகம் என்றால் அது திமுக, அதிமுக என்ற இரு துருவ அரசியல் தான். 1967 முதல் இன்று வரை இது தான் நிலவரம். மற்ற கட்சிகள் இந்த இரு கட்சிகளின் அணியில் சேர்ந்து தான் தேர்தலை சந்தித்து வந்திருக்கிறது.
இதற்கு மாற்றாக மூன்றாவது அணி என பல தேர்தல்களில் முயற்சி நடந்துள்ளது. மூன்றாவது அணி என்பது தமிழக அரசியல் களத்தில் சாதிக்கவில்லை என்பது கடந்த கால அரசியல் வரலாறு.
ஆனாலும், கடந்த 2014 மக்களவை தேர்தலில் அன்புமணி பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து தர்மபுரி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டார். அதில் அன்புமணி வெற்றியும் பெற்றார். இதில் அப்போதைய அதிமுக அமைச்சர் ஒருவர் உள்ளடி வேலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு அவரது பதவியை ஜெயலலிதா பறித்தார் என்பது தனிக்கதை.
2016ம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தலில் மாற்றம், முன்னேற்றம் அன்புமணி என்ற கோஷத்துடன் தனித்து களம் கண்டது பாமக . அன்புமணி தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டார். காரணம் இந்த தொகுதியில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக வன்னியர்கள் தான் வசிக்கிறார்கள். அந்த தொகுதியிலேயே அன்புமணி திமுகவிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
அதன் பிறகு நடந்த தேர்தல்களில் மீண்டும் ………. கூட்டணி அரசியலுக்குள் வந்து தேர்தலை சந்தித்தது பாமக. ஆனாலும் பாமக தமிழக அரசியலில் பெரிதாக சாதிக்கவில்லை.
இந்த நிலையில் தான் அன்புமணிக்கு பாமகவின் தலைவர் பதவியை கொடுத்தார் ராமதாஸ். அதன்பிறகும் கட்சியின் வளர்ச்சி பெரிதாக தெரியவில்லை. மக்கள் மத்தியில் அரசியல் கட்சிகள் பேசப்பட வேண்டும் என்றால், அது தேர்தலில் வெற்றி பெற வேண்டும்.
அந்த வகையில் பாமக கடந்த 2 தேர்தல்களில் மக்களவையில் பிரதிநிதித்துவம் பெறவில்லை. சட்டமன்றத்திலும் தற்போது 5 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். 2021 சட்டமன்ற தேர்தலில் 10.5 சதவீத உள் ஒதுக்கீடு பெற்றுவிட்டோம் என்ற மகிழ்ச்சியில் 23 தொகுதிகளில் போட்டியிட்டனர். ஆனால் மயிலம், சேலம் மேற்கு, தருமபுரி, பென்னாகரம், மேட்டூர் ஆகிய 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றனர்.
இந்த நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் கூட இல்லை. இப்போதே பாமக தேர்தல் கூட்டணி வியூகங்களை தொடங்கி விட்டது. அன்புமணி பாஜகவுடன் தான் கூட்டணி என்பதில் உறுதியாக இருக்கிறார். அதன் மூலம் மீண்டும் தனக்கு மத்திய அமைச்சர் வாய்ப்பு கிடைத்தாலும் கிடைக்கலாம் என்ற எண்ணத்தில் அவர் காய் நகர்த்துகிறார்.
மத்திய அமைச்சர் பதவி கிடைக்காவிட்டாலும், சிபிஐ போன்ற மத்திய அமைப்புகளின் வழக்குகளில் சிக்காமல் இருக்கலாம் என அவர் இந்த முடிவை எடுத்திருப்பதாக பாமகவினரே கூறுகிறார்கள்.
அதே நேரத்தில் ராமதாஸ், அதிமுகவுடன் நாம் தனித்து கூட்டணி பேசலாம், ஏன் பாஜக மூலம் நாம் சீட் பெற வேண்டும்-? நம்மை விட பாஜக தமிழ்நாட்டில் பெரிய கட்சியா? என்பது ராமதாஸ் வாதம்.
தந்தை, மகனுக்கு இடையே தைலாபுரத்தில் தோன்றிய இந்த முரண்பாடு நாளுக்கு நாள் பெரிய விரிசலை ஏற்படுத்தியது. எனவே கட்சியை மீண்டும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவேண்டும் என்று தனது பேரன் முகுந்தனை இளைஞர் அணி தலைவராக்க திட்டம் வகுத்த ராமதாஸ், புதுச்சேரி பொதுக்குழுவில் அதனை அறிவித்தார். அதை ஏற்கமுடியாது என அன்பு மணி மேடையிலேயே பதிலடி கொடுத்து விட்டார்.
தந்தை , மகனுக்கு இடையேயான மோதல் போக்கு அன்று தான் வெட்டவெளிச்சமாக எல்லோருக்கும் தெரியவந்தது. கடந்த 11ம் தேதி நடந்த சித்திரை முழு நிலவு மாநாட்டிலும் அன்புமணிக்கு எதிரான ராமதாசின் சீற்றம் மறைமுகமாக வெளிப்பட்டது.
பின்னர் தைலாபுரத்தில் நடந்த நிர்வாகிகள் கூட்டங்களை அன்புமணி புறக்கணித்தார். அப்போது பேசிய ராமதாஸ், சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறையாது என்றார். இதற்கிடையே அன்புமணி கட்சியை விட்டு நீக்கப்பட்டு விட்டார் என செய்தி பரவியது.
தந்தைக்கும், மகனுக்கும் இடையில் நடக்கும் பதவி மோதலில் சிக்கிக்கொண்டு தவியாய் தவிக்கும் கட்சியின் கவுரவ தலைவர் ஜி.கே. மணி, அன்புமணி நீக்கப்படவில்லை என விளக்கம் அளித்தார்.
இந்த நிலையில் நேற்று, ராமதாஸ் அன்புமணியை நான் நீக்குவேனா என உருக்கமாக பேசத் தொடங்கி விட்டார். 2 நாளில் என்ன நடந்தது என்பது தான் தெரியவில்லை. சிங்கத்தின் சீற்றம் ஏன் குறைந்தது என்பது மர்மமாக இருக்கிறது.
அதே நேரத்தில் தைலாபுரம் புகைச்சல் நிற்கவில்லை……. அது புகைந்து கொண்டு தான் இருக்கிறது என்பது கிட்டே இருந்து பார்க்கும் நிர்வாகிகள் கூறும் தகவலாக இருக்கிறது.
தற்போது மோதல் போக்குக்கு ஒரு இடைவேளை விடப்பட்டு இருக்கிறது என்பது தான் நிதர்சனம். இனி தேர்தல் பணிகள் , கூட்டணி பேச்சுக்கள் தொடங்கும்போது இது தந்தை மகனுக்கு இடையே நடப்பது உண்மையான மோதலா, அல்லது நம்மைப்பற்றி எந்த செய்தியுமே வரவில்லை. கொஞ்சநாள் ஊடகங்கள் நம்மைப்பற்றி பேசட்டுமே என்ற எண்ணத்தில் ஜோடிக்கப்பட்ட நாடகமா என்பது தெரியவரும்.
தைலாபுரம் கிளைமாக்ஸ் என்ன என்பது தேர்தல் வரும்போது நிச்சயம் வெளிவரும். எனவே எல்லாம் சுபமாக முடியட்டும் என நாமும் இப்போது முடித்துக்கொள்வோம்.
=====
எழுத்து
எஸ். சுவாமிதாஸ்.