வினை விதைத்தவன் வினை அறுப்பான்- பாடம் கற்றது பாகிஸ்தான்
இந்தியாவில் வன்முறையை கட்டவிழ்த்து விட வேண்டும். இந்திய மக்களிடையே இன மோதல்களை உருவாக்க வேண்டும். இந்தியாவின் வளர்ச்சியை சீர்குலைக்க வேண்டும் என்ற 3 அம்சங்களை மட்டுமே கொண்டு செயல்படும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் குழுவுக்கு அடைக்கலம் கொடுப்பது மட்டுமல்ல, அவர்களுக்கு ஆலோசனைகள், உதவிகள் வழங்கி வருவதும் பாகிஸ்தான் தான்.
ஆனால் பிரச்னை முற்றிவிட்டால், எதுவும் தங்களுக்கு தெரியாதது போல பாகிஸ்தான் காட்டிக்கொள்ளும். கடந்த மாதம் 22ம் தேதி பஹல்காமில் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தையும் பாகிஸ்தான் இன்னும் அப்படித்தான் கூறுகிறது.
ஆனால் இந்தியாவின் ஆபரேசன் சிந்தூரில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் இறுதிச்சடங்கில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள், பங்கேற்று இருக்கிறார்கள். அதுவும் ராணுவ சீருடையில் பங்கேற்றனர்.
இதற்கு பிறகும், தீவிரவாதிகளுக்கும், பாகிஸ்தான் அரசுக்கும் தொடர்பு இல்லை என்று இந்தியாவை நம்ப சொல்கிறதா பாகிஸ்தான்?
சிங்கத்துடன் சிறு நரி சண்டை போடலாமா? என்று பாகிஸ்தான் எம்.பியே அந்த நாட்டு அரசை கடுமையாக சாடினார். ஆனாலும் பாகிஸ்தான் பட்டால் தான் திருந்துவேன் என அடிபட்டு தற்போது திருந்தி இருப்பதாக தெரிகிறது.
4 நாள் அடிக்கே அலறிய பாகிஸ்தான், இப்போதாவது தன் நிலை அறிய வேண்டும். இத்தனைக்கும் இந்தியா, போர் பிரகடனம் செய்யவில்லை. தீவிரவாதிகளின் 9 முகாம்களையும், தீவிரவாதிகள் செயல்படும் இடங்களையும் மட்டுமே குறிவைத்து தாக்கியது. இந்த தாக்குதலில் 100 தீவிரவாதிகள் 40 பாகிஸ்தான் ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
1999ல் டிசம்பர் 24ம் தேதி நடந்த கந்தகார் விமான கடத்தல், மற்றும் 2019 பிப்ரவரி 14ம் தேதி நடந்த புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகளும் இந்த தாக்குதலில் உயிரிழந்தனர்.அதே நேரத்தில் இந்திய தரப்பிலும் 5 வீரர்கள் வீரமரணத்தை தழுவினர்.
இந்த நிலையில் 10ம் தேதி மாலை 5 மணியுடன் தாக்குதலை நிறுத்திக்கொள்வதாக பாகிஸ்தான் எங்கெங்கோ கெஞ்சி கூத்தாடி இறுதியில் இந்திய அதிகாரிகளிடம் பேசி தாக்குதலை நிறுத்துகிறோம். எங்களை விட்டு விடுங்கள் என்றது.
இந்தியாவும் அதை ஏற்று தாக்குதல் நடத்தவில்லை.தற்போது 2 நாட்களாக இரு நாடுகளிலும் அமைதி நிலவுகிறது. எப்போதும் இப்படி அமைதி நிலவ வேண்டும் என்பது தான் இந்தியாவின் கொள்கை. ஆனால் நம்மை சீண்டிப்பார்க்கும்போது திருப்பி தாக்காமல் இருக்க முடியாத நிலையில் தான் இந்தியாவின் பதிலடி தந்தது.
இந்த நிலையில் இன்று பாகிஸ்தான் ராணுவ உயர் அதிகாரிகள், இந்திய ராணுவ உயர் அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்துகிறார்கள். தொடர்ந்து அமைதி நிலவ அந்த பேச்சுவார்த்தை வழிவகுக்க வேண்டும் என்பது தான் ஒட்டுமொத்த இந்திய மக்களின் எண்ணமும், இந்திய அரசின் எண்ணமும்.
அதே நேரத்தில் பஹல்காமில் தாக்குதல் நடத்திவிட்டு இன்னும் பாகிஸ்தானில் பதுங்கி இருக்கும் அந்த 4 பயங்கரவாதிகள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டுமா, இல்லையா? அந்த 4 பேரையும் பாகிஸ்தானே பிடித்து இந்தியாவிடம் ஒப்படைக்கவேண்டும். அவர்களுக்கு சட்டத்தின்படி இந்தியா தண்டனை கொடுக்க வேண்டும் அப்போது தான் ஆபரேசன் சிந்தூா அர்த்தமுள்ளதாக இருக்கும்.
அதை விட்டு விட்டு அந்த தீவிரவாதிகளுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை, அவர்களை யார் என்றே எங்களுக்கு தெரியாது என பாகிஸ்தாசன் பசப்பு வார்த்தைகள் சொன்னால் அதை இந்திய தரப்பில் ஏற்கமாட்டார்கள்.
பஹல்காம் பயங்கரவாதிகனை ஒப்படைக்க வேண்டும் என்பது தான் பேச்சுவார்த்தையின் முக்கிய அஜெண்டாவாக இருக்க வேண்டும் என்பது தான் இந்திய மக்கள் 140 கோடி பேரின் எண்ணமாக இருக்கிறது. ‘
அடுத்ததாக இந்தியா, பாகிஸ்தான் இடையே எப்போது பிரச்னை ஏற்பட்டாலும் 3வது நாடு தலையிடுவதை இந்தியா எப்போதும் ஏற்றுக்கொண்டதில்லை.60 வருடங்களுக்கு முன் ஒன்றாம் வகுப்பு தமிழ் பாடத்தில் ஒரு படக்கதை இடம் பெற்றிருந்தது. பால் கட்டிக்காக 2 பேர் சண்டை போடும்போதும், மத்தியஸ்தம் செய்ய வந்தவர் என்ன செய்தார் ? என்பது தான் இந்த படக்கதையின் சாராம்சம்.
எனவே மத்தியஸ்தம் செய்வதற்கு இடம் கொடுக்காமல் இந்தியா பேச்சுவார்த்தையில் வெற்றி காணவேண்டும். இனி பாகிஸ்தான் நம்மை எந்த வழியிலும் சீண்டிப்பார்க்க நினைக்கவே கூடாத வகையில் பேச்சுவார்த்தை அமைந்திட வேண்டும்.