தூத்துக்குடியில் இன்று தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது. மாநாட்டை தொடங்கி வைத்து முதல்வர் ஸ்டாலின் பேசினார். அவர் பேசியவதாது:
தமிழ்நாட்டின் வளர்ச்சி பயணத்தில் பங்கேற்க வந்துள்ள முதலீட்டாளர்களை வரவேற்கிறேன். தொழில் வளர்ச்சிக்காக தமிழ்நாட்டில் சிறந்த கட்டமைப்பு உருவாக்கி உள்ளோம். தென் மாவட்டங்களை தொழில் வளர்ச்சி மிக்க மாவட்டங்களாக உருவாக்கி வருகிறோம். தென் மாவட்டங்களின் வளர்ச்சியில் இது பொன்நாள். 2030க்குள், 1 டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சி மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவோம். இதுவரை பார்க்காத தொழில் வளர்ச்சியை உருவாக்கி உள்ளோம். தென் கிழக்கு ஆசியாவில் இருந்து வருவோரும் கப்பல்களுக்கு இந்தியாவின் நுழை வாயிலாக தூத்துக்குடி உருவாகி உள்ளது. தென் தமிழ்நாட்டில் இதுவரை பார்க்காத தொழில் வளர்ச்சியை சாத்தியமாக்கி உள்ளோம். அனைவருக்குமான வளர்ச்சி, அனைத்து துறை வளர்ச்சி, அனைத்து மாவட்டங்களுக்குமான வளர்ச்சி, இது தான் திராவிட மாடல்.
தூத்துக்குடியில் 250 ஏக்கர் பரப்பில் விண்வெளி பார்க் அமைக்கப்படும். நெலலை, தூத்துக்குடியில் முருங்கை ஏற்றுமதி மற்றும் சாகுபடிக்கான கிடங்குகள் ரூ.5 கோடியில் உருவாக்கப்படும். நெல்லையில் உணவு பதப்படுத்துதல் மண்டலம் ஏற்படுத்தப்படும்.
ரூ.32 ஆயிரம் கோடியில் 41 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நெல்லையில் அமைய உள்ள காலணி தொழிற்சாலையில் 20 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இந்த மாநாட்டுக்கு ரைசிங் என தம்பி ராஜா பெயா் சூட்டி உள்ளார். அது பொருத்தமானது தான். கடந்த 4 ஆண்டுகளில் 10.30 லட்சம் கோடி தொழில் முதலீடுகளை ஈர்த்துள்ளோம். 32 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. எல்லாவிதமான வேலைகளுக்கும் இங்கு தொழிலாளர்கள் உள்ளனர் என தொழிலதிபர்கள் கூறி உள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார். விழாவில் அமைச்சர்கள், அதிகாரிகள், தொழல் அதிபர்கள் பங்கேற்றனர்.