Skip to content

10 பேர் சேர்ந்து சினிமாவை அழிக்க முயற்சிக்கிறார்கள்-நடிகர் வடிவேலு

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 69 ஆவது பொதுக்குழு கூட்டம் சென்னையில் தேனாம்பேட்டையில் நடைபெற்றது. இதில் நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட பல நடிகர்கள், இயக்குநர்கள், மற்றும் தயாரிப்பாளர்கள் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் நடிகர் வடிவேலு கலந்து கொண்டு, தமிழ் சினிமாவைப் பாதிக்க முயலும் சிலருக்கு எதிராக நடிகர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று கூறி கவனம் ஈர்த்தார். அவர், “பத்து பேர் சேர்ந்து சினிமாவை அழிக்கப் பார்க்கிறார்கள்” என்று கூறி, அவர்களுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், YouTube, Facebook, Twitter (X), Instagram போன்ற சமூக ஊடகங்களில் நடிகர்கள் குறித்து பரவும் பொய்யான செய்திகள் மற்றும் ட்ரோல்களுக்கு எதிராக நடிகர் சங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இது தொடர்பாக பொதுக்குழு கூட்டத்தில் நடிகர் வடிவேலு, ”யூடியூப் ஒன்றை வைத்துக் கொண்டு நம் கலைஞர்களைத் தவறாகப் பேசி, சிறிதளவு விஷயத்தை பெரிதளவு ஊதிப் பெரிதாக்கி விடுகிறார்கள்.

அவர்களுக்கு சீக்கிரமாக நடிகர் சங்கத்தின் சார்பில் ஆப்பு வைக்க வேண்டும். சினிமாவை 10 பேர் சேர்ந்து அழித்து வருகிறார்கள் இப்படிப் பேசி வருபவர்களைப் போர்க்கால அடிப்படையில் உண்டு இல்லாமல் ஆக்க வேண்டும். காசு கொடுத்து படத்துக்கு நெகட்டிவ் விமர்சனங்களை வெளியிட வைக்கிறார்கள், அவதூறு பரப்புவோரை தூங்க விடாமல் நடிகர்கள் ஒன்று சேர்ந்து நெருக்கடி கொடுக்க வேண்டும்.

தங்கள் படம் நன்றாக ஒட வேண்டும் என்று, சிலர் போட்டி நடிகர்களின் படங்களுக்கு யூடியூபர்கள் முலம் நெகடிவ் விமர்சனங்கள் கொடுக்க வைத்து தோல்வியடைய செய்கிறார்கள். நடிகர் சங்கம், முதல் நாளே ஊடகங்கள் விமர்சனம் எடுப்பதை முறைப்படுத்த வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

error: Content is protected !!