கோவை வனத்தை ஒட்டிய கிராமங்களில் வன விலங்குகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. இந்நிலையில் மருதமலை வனப் பகுதியை ஒட்டி உள்ள கணுவாய் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் 11 அடி நீள மலைப் பாம்பு உலாவுவதை கண்ட மக்கள் பீதி அடைந்து வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற வனத்துறையினர் பாரஸ்ட் ஹார்ட் பவுண்டேஷன் நெட்வொர்க் சேர்ந்த சாந்தகுமார் என்பவருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாம்பு பிடி வீரர் அந்தப் 11 அடி நீளம் கொண்ட மலைப் பாம்பை லாவகமாக பிடித்து மாங்கரை வனப் பகுதியில் விடுவித்தார். மேலும் இதுபோன்று அப்பகுதியில் உலா வரும் வனவிலங்குகள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என வனத் துறையினர் தெரிவித்தனர் மேலும் அப்பகுதி மக்கள் வன விலங்குகளை தாக்கி கொல்லக் கூடாது என அறிவுரைகளை வழங்கி சென்றனர்.