தமிழகம் முழுவதும் இன்று நண்பகல் வரை 2 கோடியே 9 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 14 லட்சம் குடும்பங்களுக்கு நாளையும் வழங்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய பகுதியில் உள்ள நியாயவிலைக் கடையில் பொங்கல் தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழக உணவு மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகப்பினை வழங்கினார். பின்னர் பேசிய அமைச்சர் சக்கரபாணி, “கடந்த 8ம்தேதி துவங்கி இன்று நண்பகல் வரை தமிழகம் முழுவதும் 2 கோடியே 9 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 14 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு நாளையும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும். 94 சதவீத பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த நான்கரை ஆண்டுகளில் 21 லட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் நியாய விலை கடைகள் பெரும்பாலும் பிரிக்கப்பட்டு புதிய கடைகள் திறக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்ட அமைச்சர் தமிழக முதலமைச்சர் திராவிட ஆட்சியில் தமிழகத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் பல்வேறு திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்றார்.

