Skip to content

இலங்கை விமான நிலையத்தில் உணவு கிடைக்காமல் 150 தமிழர்கள் தவிப்பு

  • by Authour

துபாயில் இருந்து இலங்கை வழியாக இந்தியா வரவிருந்த சுமார் 300 பேர், கடந்த 27 ம் தேதி இலங்கையின் மத்தளை விமான நிலையம் வந்துள்ளனர். புயல் காரணமாக அங்கு விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் 1 நாள் முழுக்க அங்கு தவித்துள்ளனர். அங்கிருந்து பிறகு கொழும்பு விமான நிலையத்துக்கு சென்றுள்ளனர்.

அங்கிருந்து சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு புறப்பட இருந்த நிலையில், டிட்வா புயல் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக 150 தமிழர்கள் உள்ளிட்ட 300 பேர் அங்கு தவித்து வருகின்றனர். உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளே கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் விமான நிலைய அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் பேசுகையில், “எங்களிடம் இந்திய ரூபாயும், குவைத் பணமும் தான் இருந்தது. மத்தளை விமான நிலையத்தில் அதை வைத்து சாப்பாடு கூட வாங்க முடியவில்லை. அங்கு ஒரு நாள் தவித்தோம். இப்போது கொழும்பு வந்தபிறகும் விமானம் ரத்து செய்யப்பட்டதாக அறிவித்தார்கள். உணவு கூட கிடைக்காமல் கஷ்டப்படுகிறோம்.

இலங்கையை ஒட்டிய கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நவம்பர் 27ஆம் தேதி டிட்வா புயலாக மாறியது. டிட்வா புயலால் இலங்கையின் கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், பல வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. பெரும்பாலான ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் அதிகனமழை, வெள்ளம் காரணமாக இதுவரை சுமார் 90 பேர் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. பல ஆயிரக்கணக்கான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக 20,500 ராணுவ வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!