Skip to content

வௌ்ளம் பாதிக்கக்கூடிய 154 இடங்கள்… திருச்சியில் கண்காணிப்பு குழு தீவிரம்

  • by Authour

திருச்சி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்தாண்டு இயல்பை விட கூடுதலாக மழைப்பொழிவு இருக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால், வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் பாதிப்புகள், காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் ஏற்படும் பாதிப்புகளையும் எதிர்கொள்ளும் வகையில் திருச்சி மாவட்டத்தில் கலெக்டர் சரவணன் தலைமையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை ஒருங்கிணைப்பில் பல்வேறு துறைகள் ஒருங்கிணைக்கப்பட்டு முன்னெச்சரிக்கை மற்றும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதன் ஒரு பகுதியாக, மாவட்டத்தில் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கக் கூடிய பகுதிகள் கண்டறியப்பட்டு, அப்பகுதிகளில் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து வருவாய் மற்றும் பேரிடர்மேலாண்மைத்துறை அலுவலர்களிடம் கேட்ட போது,‘‘திருச்சி மாவட்டத்தில் மிதமான மழை பெய்து வருகிது. எனினும், மாவட்டத்தின் கடந்த கால பருவமழை தரவுகளின் அடிப்படையில், அதிகபட்சமாக 5 அடி வரையிலும் தண்ணீர் தேங்கும் பகுதிகள் உட்பட மழை மற்றும் வெள்ளக்காலத்தில் அதிகம், மிதமாக மற்றும் குறைந்த அளவு பாதிக்கக்கூடிய பகுதிகளாக 11 தாலுகாகளில் 154 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதில், காவிரி, கொள்ளிடம் கரையோரப்பகுதிகளும் அடங்கும். இப்பகுதிகளில், அமைக்கப்பட்டுள்ள குழுவினர் தொடர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதிகளில் பாதிப்ப ஏற்பட்டால், அங்குள்ள பொதுமக்களை தங்க வைக்க 154 நிவாரண முகாம்களும், அவற்றிற்குரிய பொருட்களும் தயார் நிலையில் உள்ளன.
இதுதவிர, மாவட்டத்தில் உள்ள 11 தாலுகாகளிலும் ஏற்படும் மழை பாதிப்புகளை கண்காணிக்கவும், பாதிக்கப்படும் இடங்களுக்கு நேரில் சென்று நிவாரணப்பணிகளை மேற்கொள்ளவும், தாலுகா அலுவலகங்களில் மழை பாதிப்பு தொடர்பான பணிகளை அவ்வப்போது ஆய்வு செய்யவும், துணை கலெக்டர் நிலையான அதிகாரிகள், மண்டல அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்’’, என்றனர்.
மேலும், திருச்சி மாவட்டத்தில் மழை மற்றும் வெள்ளப் பாதிப்பு ஏற்படும் காலங்களில், அரசு தரப்பில் இருந்து அலுவலர்கள், உதவிகள் கிடைக்கும் முன்பாக, பாதிக்கப்பட்ட மக்கள், முதலில் தொடர்பு கொள்ளும் வகையில், மாவட்டம் முழுவதும் அனைத்துப்பகுதிகளிலும் நீச்சல் தெரிந்த, உதவி மனப்பான்மை கொண்ட, 4 ஆயிரத்து 940 பேர் தேர்வு செய்யப்பட்டு பட்டியலிடப்பட்டுள்ளனர். இவர்கள், தங்கள் பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக களத்தில் மக்களுக்கு முதல்கட்ட உதவிப்பணிகளில் ஈடுபடுவார்கள் எனவும் பேரிடர் மேலாண்மைத்துறையினர் தெரிவித்தனர்.

error: Content is protected !!