தலையங்கம்
வட மாவட்டங்களின் கல்வித்தரம், கவனிக்குமா கல்வித்துறை?
கல்வியில் தமிழகம் இந்தியாவில் நம்பர் 1 மாநிலம் என்று பெருமையோடு சொல்கிறோம். உயர்கல்வியில் அதிகம் பேர் இங்கு தான் படிக்கிறார்கள். வேலைக்கு செல்லும் பெண்களும் தமிழ்நாட்டின் தான் அதிகம். இந்தியாவின் சிறந்த பல்கலைக்கழகங்களில் பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் தமிழ்நாட்டில் தான் இருக்கிறது.
இதை எல்லாம் தீர்க்கதரிசனமாக சொன்னவர், மகா கவி பாரதியார். அவர் ஏற்கனவே கல்வியில் சிறந்த தமிழ்நாடு பாடிவிட்டார்.
50வருடங்களுக்கு முன் பெண்கள் பள்ளி இறுதி வகுப்பு செல்வதே அரிதாக இருந்தது. அப்படியும் சென்றாலும் கூட, அவர்கள் தேர்ச்சி மிகவும் குறைவாகவே இருந்தது. ஆனால் கடந்த 15 வருட தேர்ச்சி விகிதங்களை பார்த்தால், மாணவர்களை விட மாணவிகள் தான் அதிகம் தேர்ச்சி பெற்று வருகிறார்கள்.
தற்போது எத்தனையோ சோசியல் மீடியாக்களின் தாக்கம், இடையூறுகள், ஈர்ப்புகள் இருந்தபோதிலும் அது கல்வியை பாதித்ததாக தெரியவில்லை. ஆனால் ஒன்றைமட்டும் சொல்லலாம் இந்த சோசியல் மீடியாக்களின் தாக்கம் இல்லாதிருந்தால் இன்னும் எம் பிள்ளைகள் உலகளாவிய சிறப்பு பெற்றிருப்பார்கள் என்பது மட்டும் உறுதி.
இன்று வெளியிடப்பட்ட 10, 11ம் வகுப்பு தேர்ச்சி விகிதங்களை பார்க்கும்போது, இதனை தெரிந்து கொள்ளலாம். பத்தாம் வகுப்பில் தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 36 ஆயிரத்து 120 பேர்.
மாணவிகள் எண்ணிக்கை 4 லட்சத்து 35 ஆயிரத்து 119 பேர் . அதாவது மாணவர்களை விட 1001மாணவிகள் தான் குறைவு. மாணவர்களுக்கு நிகராக மாணவிகளும் தமிழ்நாட்டில் படிக்க செல்கிறார்கள். தேர்ச்சி பெற்ற மாணவிகள் 4 லட்சத்து 17 ஆயிரத்து 183 பேர். அதாவது 95.88 சதவீதம் தேர்ச்சி பெற்று அசத்தி உள்ளனர்.
ஆனால் மாணவர்களின் தேர்ச்சி 91.74 %தான். மாணவர்களை விட 4.14% மாணவிகள் தான் அதிகம் தேர்ச்சி பெற்று உள்ளனர்.
அத்துடன் 50 வருடங்களுக்கு முன் உள்ள ரிசல்ட் விவரங்களை எடுத்துக்கொண்டால் திருநெல்வேலி மாவட்டம் குறிப்பிடத்தக்க இடத்தை பெறும். இங்குள்ள பாளையங்கோட்டை நகரம் தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என அழைப்பார்கள். அந்த அளவு கல்வியில் சிறந்து விளங்கியது. பின்னர் படிப்படியாக அது திசை மாறியது. கடந்த 10 வருடங்களுக்கு முன் சில தனியார் பள்ளிகளின் செயல்பாடுகளால் நாமக்கல் மாவட்டம் முதலிடம் பெற்று வந்தது. விருதுநகர், ஈரோடு மாவட்டங்களும் குறிப்பிடத்தக்க இடங்களை பிடித்தது.
ஆனால் அதுவும் இப்போது பின்தங்கி போய்விட்டது. சில வருடங்களுக்கு முன் மிகவும் பின்தங்கிய மாவட்டமான பெரம்பலூர் கூட முதல் 2 இடங்களை பிடித்தது. இந்த ஆண்டு பின்தங்கிய மாவட்டமான சிவங்கை 10ம் வகுப்பு ரிசல்ட்டில் முதலிடம் பிடித்து உள்ளது. விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருச்சி அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளது. இதற்கு காரணம் இந்த மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளின் தேர்ச்சி அதிகம் இருந்துள்ளது. இதனால் ஒட்டுமொத்த மாவட்டத்திற்கே பெருமை சேர்த்து உள்ளது.
இது யாருமே எதிர்பார்க்காத ஒன்று என்றபோதிலும் நல்ல முன்னேற்றம் என்பதால் வரவேற்போம், வாழ்த்துவோம்.
அதே நேரத்தில் 11ம் வகுப்பு ரிசல்ட்டில் இன்னொரு பின்தங்கிய மாவட்டமான அரியலூர் முதலிடம் பிடித்து உள்ளது.
ஆனால் வடக்கு மாவட்டங்கள் ரிசல்ட்டில் மிகவும் பின்தங்கி உள்ளது. அதுவும் தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை மாவட்டம் 90.73% பெற்று பின் தங்கிய இடத்தை பிடித்து உள்ளது. திருவள்ளூர், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி போன்ற வடக்கு மாவட்டங்கள் அத்தனையும் ரிசல்ட்டில் பின்தங்கி உள்ளது. இதற்கு காரணம் என்ன என்பதை கல்வித்துறை கண்டறிய வேண்டும்.
மாணவர்களிடம் கோளாறா, ஆசிரியர்களிடம் கோளாறா என்பதை கண்டறிந்து அதற்கு கல்வித்துறை உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும். பொதுவாக ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். இந்த பதத்தை சோதிக்க அத்தனை பேரும் தலைநகர் சென்னையை தேர்வு செய்தால் ஒட்டு மொத்த தமிழகத்திற்கும் பாதகத்தை ஏற்படுத்தி விடும் என்பதால் வடக்கு மாவட்டங்களில் கல்வித்துறை அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பது தெரியவருகிறது.
நோய்நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல் –
என்ற குறளுக்கு ஏற்ப என்ன நோய், என கண்டறிந்து அதற்கான மருந்து என்ன என்பதை அறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும். அப்போது தான் வடக்கு மண்டலமும் சிறப்பான ரிசல்ட்டை தரும். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் அதை நிச்சயம் செய்வார் என எதிர்பார்க்கலாம்.