குளித்தலை மகா மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவின் போது 17 வயது இளைஞர் கத்தியால் குத்தி கொலை. மேலும் ஒருவர் படுகாயம்.
கரூர் மாவட்டம் குளித்தலை கொல்லம் பட்டறை தெருவை சேர்ந்தவர் ஷியாம் சுந்தர் 17. இவர் பிளஸ் டு தேர்வு எழுதிவிட்டு அதன் முடிவிற்காக காத்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் நேற்று இரவு குளித்தலை மகா மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பூச்சொரிதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கொல்லம் பட்டறை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வாகனத்தில் மாரியம்மனுக்கு பூக்களை எடுத்து சென்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக
வந்தனர். பேரளாம்மன் கோவில் தெருவில் வந்தபோது நடனமாடி கொண்டிருந்த சியாம் சுந்தர் மீது குளித்தலை பெரிய பாலத்தை சேர்ந்த நாகேந்திரன் மற்றும் சிலர் விழுந்துள்ளனர்.
அவர்களை ஓரமாக நடனம் ஆடுமாறு ஷியாம் சுந்தர் சொன்னதற்கு நாகேந்திரன் தான் வைத்திருந்த கத்தியால் அவரை குத்தியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே ஷியாம் சுந்தர் உயிரிழந்தார். மேலும் இச்சம்பவத்தை தடுக்க வந்த அஜய், வசந்தகுமார் ஆகிய இருவருக்கும் கத்தி குத்து விழுந்தது.
இதில் படுகாயம் அடைந்த அஜய் குளித்தலை அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். லேசான காயங்களுடன் வசந்தகுமார் முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த குளித்தலை போலீசார் ஷியாம் சுந்தரின் உடலை பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு இரண்டு தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை வலை வீசி தேடி வருகின்றனர்.
மேலும் இந்த கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த கரூர் மாவட்ட எஸ்பி பெரோஸ் கான் அப்துல்லா சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். 17 வயது இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.