Skip to content

கிலோ ரூ.60க்கு தக்காளி விற்பனை…ரேஷன் கடைகளில் மக்கள் நீண்ட வரிசை

  • by Authour

சென்னை தலைமைச்செயலகத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் நேற்று தக்காளி விலையேற்றம் தொடர்பாக கூட்டுறவுத்துறையின் உயர் அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தினார். கூட்டம் முடிந்ததும் அமைச்சர் பெரியகருப்பன் அளித்த பேட்டியில் கூறியதாவது:

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவின்படி, தக்காளி விலையேற்றத்தை கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு நடவடிக்கைகள் கூட்டுறவுத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அண்டை மாநிலங்களில் பெய்த கனமழையினால் தக்காளி விளைச்சல் குறைந்ததால், தக்காளியின் வரத்து குறைந்து காணப்படுகிறது. இதனால் மீண்டும் வெளிச்சந்தையில் தக்காளின் விலை உயர்ந்துள்ளது.

இந்நிலையை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் பாதிப்படையாமல் தடுக்கும் வகையில் தற்போது தமிழ்நாடு முழுவதும் தக்காளி விற்பனை 302 ரேஷன் கடைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 1-ந்தேதி (இன்று) முதல் தக்காளி விற்பனையை 500 ரேஷன் கடைளுக்கு நீட்டிப்பு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 100 ரேஷன் கடைகளிலும், கோவை, மதுரை, சேலம், திருச்சி மாவட்டங்களில் 20 கடைகளிலும்; செங்கல்பட்டு, ஈரோடு, தஞ்சாவூர், திருநெல்வேலி, திருவள்ளூர், தூத்துக்குடி, வேலூர் மாவட்டங்களில் 15 கடைகளிலும்; கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, காஞ்சீபுரம், கரூர், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகை, நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருப்பூர், திருவண்ணாமலை, விழுப்புரம், விருதுநகர் மாவட்டங்களில் 10 கடைகளிலும்; அரியலூர், கன்னியாகுமரி, நீலகிரி, ராணிப்பேட்டை, சிவகங்கை, தென்காசி, தேனி, திருப்பத்தூர், திருவாரூர் மாவட்டங்களில் 5 கடைகளிலும் என தமிழ்நாடு முழுவதும் 500 ரேஷன் கடைகளில் 1-ந்தேதி (இன்று) முதல் தக்காளி கிலோ ஒன்றுக்கு ரூ.60 என்ற விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். அதன்படி இன்று தமிழ்நாடு முழுவதும் ரேஷன்கடைகளில்  60 ரூபாய்க்கு தக்காளி விற்பனை நடந்து வருகிறது. ஒரு நபருக்கு 1 கிலோ வீதம் வழங்கப்பட்டது. இதனை வாங்க மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இந்த திட்டம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!