Skip to content

2 குழந்தைகளை கொன்று பெற்றோர் தற்கொலை… திருச்சியில் பரிதாபம்

திருச்சி மேலகல்கண்டார்கோட்டை மூப்பனார் நகரை சேர்ந்தவர்  அலெக்ஸ்(42),  ஜவுளிக்கடை நடத்தி வந்தார். அதில்   பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டதால் அந்த தொழிலை விட்டு விட்டார்.  இந்த நிலையில்,  தஞ்சையில் உள்ள அலெக்சின் தாயாருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதால் அவருக்கான மருத்துவ சிகிச்சைக்காக  ரூ.3 லட்சம் கடன் வாங்கி உள்ளார்.

இது தவிர அலெக்சின் தம்பி, தொழில் செய்வதற்காக  ஒருவரிடம் கடன் வாங்கி கொடுத்து உள்ளார். அவருக்கும்  தொழில்  நஷ்டம் ஏற்பட்டது. இந்த கடன்கள் எல்லாம்  அலெக்சின் மேல் விழுந்தது. கடன் கொடுத்தவர்கள் நெருக்கத் தொடங்கினர்.

அலெக்சின் மனைவி  விக்டோரியா(35), ரயில்வே ஊழியர்.  இவர்களுக்கு ஆராதனா(9),  ஆலியா(3) என்ற  இரு குழந்தைகள் இருந்தனர். இந்த நிலையில்  மேலகல்கண்டார்கோட்டை மகாலட்சுமி நகரில்  அலெக்ஸ் ஒரு வீடு வாங்கி உள்ளார். அந்த வீட்டுக்கான கடன் வாங்கிய வகையில், இதற்கான தவணை

கட்டுவதற்கு  விக்டோரியாவின் தாயாரின் பென்சன் பணத்தை பயன்படுத்தி வந்து உள்ளனர்.  சில மாதங்கள்  இப்படி சென்ற நிலையில் விக்டோரியாவின் தாயார்  இறந்து விட்டதால்,  அந்த பென்சன் பணமும்  நின்று விட்டது. இதுவும்  அலெக்ஸ்க்கு  பெரும் நெருக்கடியை கொடுத்தது.

கடன் கொடுத்தவர்கள் வந்து  நச்சரிக்கத் தொடங்கினர்.இதனால் அலெக்ஸ் நிம்மதி இழந்தார். இந்த நிலையில் இன்று காலையில்  வெகுநேரமாகியும் அலெக்ஸ் வீட்டில் இருந்து  ஆள் நடமாட்டமே தென்படவில்லை. இதனால் அக்கம் பக்கத்தினர் வந்து  வீட்டுக்குள் பார்த்தபோது  குழந்தைகள் ஆராதானா,  ஆலியா இருவரும் ஒரு அறையில்  இறந்து கிடந்தனர்.

அலெக்சும்,  விக்டோரியாவும் தூக்கில் பிணமாக தொங்கினர்.  உடனடியாக பொன்மலை போலீசுக்கு தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் வெற்றிவேல்,  உதவி ஆணையர் சதீஷ்குமார் மற்றும் போலீசார் வந்து விசாரணை நடத்தி,  சடலங்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடன் தொல்லையால், 2 குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கொன்று விட்டு தம்பதியரும் தற்கொலை செய்து கொண்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

error: Content is protected !!