திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலை அருகே சிறுகமணி கிராமம் செல்வமணி அக்ரஹாரம் சிவன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் நாகமுத்து.இவரது மனைவி பட்டு (70). கணவர் இறந்துவிட்ட நிலையில் தனியாக வசித்து வரும் இவர், நேற்று மாலை தனது குடிசை வீட்டில் விளக்கேற்றி வைத்துவிட்டு அருகில் இருந்த கோவிலுக்குச் சென்றுவிட்டார். சிறிது நேரத்தில் திடீரென அவரது குடிசை வீட்டில் தீப்பற்றி எரிந்தது. தொடர்ந்து அருகிலிருந்த வாழையிலை வியாபாரி காமராஜ் வீட்டிலும் தீ பரவியது.
அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் துரிதமாக செயல்பட்டு தீயை அணைக்க முயன்றபோது, காமராஜ் வீட்டிலிருந்த சமையல் எரிவாயு உருளை தீயில் வெடித்து சிதறியது. இதனால் தீ மேலும் பரவியது. அதிர்ஷ்டவசமாக இருவரது வீட்டிலும் யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏற்படவில்லை. பொதுமக்கள் மற்றும் திருச்சி கன்டோன்மென்ட் தீயணைப்பு நிலைய வீரர்கள் துணையுடன் தீயை அணைத்து மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது. என்றாலும் இரு வீடுகளிலிருந்த பொருள்களும் தீயில் எரிந்து நாசமாயின. சம்பவம் குறித்து பேட்டைவாய்த்தலை போலீஸார் விபத்து குறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
