சென்னை, பல்லாவரம் அருகே நள்ளிரவு நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்த 2ரவுடிகள் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக, 8 பேர் கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பல்லாவரம் அடுத்த திரிசூலம், துளசிங்க முதலியார் தெருவில் அமைந்துள்ள ஒரு வீட்டில், நேற்று முன்தினம் இரவு 2 ரவுடிகள் தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவு சுமார் ஒரு மணியளவில் வந்த மர்ம கும்பல் ஒன்று, கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்கள் இருவரையும் கொடூரமாக வெட்டிக்கொலை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
இதுகுறித்து பல்லாவரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், கொலையான இருவரின் உடலையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்த போலீசார், தடயவியல் நிபுணர்கள் வரவழைத்து தடயங்கள் சேகரித்து நடத்திய முதல்கட்ட விசாரணையில், தாம்பரம் அடுத்த முடிச்சூர், எம்ஜிஆர் நகர் முதல் தெருவை சேர்ந்த ஆறு (எ) ஆறுமுகம் (21), முடிச்சூர் லெட்சுமி நகர், காந்தி தெருவை சேர்ந்த சதீஷ் (22) என்பதும், 2 பேரும் நண்பர்கள் எனவும் கூறப்படுகிறது.
இவர்களில், ஆறுமுகம் மீது ஏற்கனவே பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 6 வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த ஆண்டு பெரும்புதூர் அடுத்த எழுச்சூர் ஊராட்சி மன்ற தலைவரை வெட்டிய சம்பவத்தில் ஆறுமுகத்திற்கு தொடர்பு இருப்பதும், அத்துடன் சில நாட்களுக்கு முன்பு முடிச்சூரை சேர்ந்த பிரபல ரவுடி தீபக் (23) என்பவரை வீடு புகுந்து தாக்கிய வழக்கில் ஆறுமுகத்தின் நண்பர்கள் அனைவரும் போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில், ஆறுமுகம் மட்டும் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

