திருச்சி, திருவெறும்பூர் அருகே துவாக்குடிமலையில் இயங்கி வரும் அரசு மாதிரி பள்ளியில் பிளஸ் டூ மாணவன் மர்ம சாவு? போலீசார் விசாரணை! திருவெறும்பூர் ஜூலை 31 திருவெறும்பூர் அருகே துவாக்குடி மலையில் இயங்கி வரும் அரசு மாதிரி பள்ளியில் பிளஸ் டூ படிக்கும் மாணவன் மர்மமான முறையில் இன்று இறந்து கிடந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவெறும்பூர் அருகே துவாக்குடி மலை அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் அரசு மாதிரி பள்ளி கடந்த சில மாதம் முன்பு தமிழக முதல்வரால் திறந்து வைக்கப்பட்டது. இப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை ஆண்கள் பெண்கள் இருவருக்கும் தனித்தனியே ஹாஸ்டல் வசதியுடன் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டில் பல்வேறு ஊர்களில் இருந்து மாணவ மாணவியர் தங்கி படித்து வருகின்றனர்.
இந்நிலையில் அப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயோ சி எஸ் சி பிரிவில் படித்து வரும் வேலூர் மாவட்டம் கொடிய நத்தம் வசந்த நகர் எம் குப்பம் பகுதியைச் சார்ந்த பலராமன் மகன் யுவராஜ் (17) என்பவர் இன்று காலை விடுதி அறையில் உள்ள ஃபேனில் கேபிள் ஒயரில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார் என்று சொல்லப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த துவாக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து போன யுவராஜ் உடலை கைப்பற்றி துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். இப்பள்ளியில் கடந்த சில மாதங்கள் முன்பு மாணவி ஒருவர் மர்மமான முறையில் இறந்தது இன்னும் அப்பள்ளி மாணவர்களிடையே சோகம் மாறா நிலையில் இன்று மீண்டும் ஒரு மாணவனின் மர்ம சாவு மாணவ மாணவிகள் இடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.