செனனை மயிலைத் தொகுதி திமுக எம்.எல்.ஏ. வேலு இல்லத் திருமணம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. திருமணத்தை நடத்தி வைத்து, மணமக்களை வாழ்த்தி முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார். அவர் பேசியதாவது:
இந்தியாவில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டபோது, திமுக அதனை கடுமையாக எதிர்த்தது. ஆட்சியில் இருந்தபோதும் எதிர்த்தோம். நெருக்கடி நிலையை நீங்கள் ஆதரிக்கவேண்டாம். எதிர்க்காமல் இருங்கள். அப்படி செய்தால் நீங்கள் ஆட்சியில் தொடரலாம் என்று சமாதானம் பேசினார்கள்.
ஆட்சி அல்ல, என் உயிரே போனாலும் சர்வாதிகாரத்தை ஏற்கமாட்டோம் என்றார் கலைஞர். சிறையில் உள்ள தலைவர்களை விடுதலை செய்ய வேண்டும், நெருக்கடியை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக தீர்மானம் போட்டதுதிமுக. அதனால் ஆட்சியை கலைத்தார்கள். அதனால் நாங்கள் கவலைப்படவில்லை. அதன் பிறகு 14 ஆண்டுகள் ஆட்சிக்கு வரமுடியவில்லை. பின்னர் கலைஞர் தலைமையில் ஆட்சிக்கு வந்தோம். 5 முறை கலைஞர் தலைமையில் ஆட்சிக்கு வந்தோம்.
இப்போது என் தலைமையில் 6வது முறை ஆட்சிக்கு வந்துள்ளோம். 7வது முறையும் ஆட்சிக்கு வருவோம். திமுகவினர் நெருக்கடிகளை பார்த்தே வளர்ந்தவர்கள். அமலாக்கத்துறை சோதனைக்கெல்லாம் அஞ்சமாட்டோம். வரும் 2026 தேர்தலில் 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வென்றாலும் ஆச்சரியமில்லை. நம்மை எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும், எதிர்க்கட்சிகள் எத்தகைய கூட்டணி வைத்து வந்தாலும் ஒரு கை பார்ப்போம் என்ற முடிவில் தான் இருக்கிறோம். நம்மை எதிர்ப்பவர்கள் எத்தகைய கூட்டணி வைத்தாலும் நாம் வெற்றி பெறுவோம்.
2026லும் திராவிட மாடல் ஆட்சி தான் அமையும். தமிழ்நாடு கம்பீரமாக தலைநிமிர்ந்து நிற்கிறது. உலகத்திற்கே வழிகாட்டும் ஆட்சி நடத்திக்கொண்டு இருக்கிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.