மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையை அடுத்த கொற்கை கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில். இவரது குழந்தைகளுக்கு காது குத்துவதற்காக நேற்று மதியம் கொற்கை மாரியம்மன் கோயிலுக்கு சென்றிருந்தபோது, அம்மனுக்கு படையல் இடுவதற்காக அங்குள்ள ஆலமரத்தடியில் அடுப்பில் நெருப்பு மூட்டி உள்ளார்கள். அடுப்பில் இருந்து கிளம்பிய புகை பட்டவுடன் மரத்தில் கூடு கட்டி இருந்த கதண்டுகள் வெளியேறி அங்கிருந்து அனைவரையும் கண்டித்தன. இதில், 10 சிறுவர்கள் உட்பட 37 பேருக்கு முகம் கை கால்களில் வீக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அனைவரும் 108 அவசர
ஊர்தி மூலம் மயிலாடுதுறை அரசினர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டது. இதில் லேசான காயம் அடைந்த 7 பேர் முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர் திருப்பி அனுப்பப்பட்ட நிலையில், மீதம் இருந்த 30 பேர் மயிலாடுதுறை அரசினர் மருத்துவமனையில் ஒரு நாள் கண்காணிப்பில் தங்க வைக்கப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் தற்போது வீக்கம் குறைந்துள்ள நிலையில் இன்று மாலைக்குள் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளனர்.