தமிழ்நாடு முழுவதும் உதவி ஆய்வாளர்களுடன் செயல்பட்ட 280 காவல் நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.அந்தவகையில் திருச்சி காவல் சரகத்தில் உதவி ஆய்வாளர்களுடன் செயல்பட்ட 30 காவல் நிலையங்கள் ஆய்வாளர் பதவியுடன் காவல் நிலையங்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம், மணிகண்டம் காவல் நிலையம், பெட்டவாய்த்தலை, கல்லக்குடி, கொள்ளிடம், காட்டுப்புத்தூர், உப்பிலியபுரம், புத்தாநத்தம், வடநாடு ஆகிய காவல் நிலையங்கள், பெரம்பலூர் மாவட்டத்தில் மருவத்தூர், வீ.களத்தூர், கைகளத்தூர் காவல் நிலையங்கள், அரியலூர் மாவட்டத்தில் கயர்லாபாத், தளவாய், எரும்புலிகுறிச்சி, விக்கிரமங்கலம் காவல் நிலையங்கள், கரூர் மாவட்டம் தாந்தோணிமலை, வெள்ளியணை, வாங்கல், சின்ன தாராபுரம், தென்னிலை காவல் நிலையங்கள், புதுக்கோட்டை மாவட்டம் செம்பட்டி விடுதி, மலையூர், வெள்ளனூர், அரிமளம், ஆதனக்கோட்டை, நமணசமுத்திரம், கரூர், ஏம்பல், ஜெகதாபட்டினம், நாகுடி ஆகிய 30 காவல் நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
தரம் உயர்த்தப்பட்ட காவல் நிலையங்கள் மூலம் பொதுமக்கள் முக்கியமான வழக்குகள், பாஸ்போர்ட் பரிந்துரைகள் போன்றவற்றிற்கு இனி வட்டார ஆய்வாளரை சென்று பார்க்க வேண்டியது இல்லை. உள்ளூர் காவல் நிலையத்திலேயே தங்களது பணிகளை முடித்துக் கொள்ள இயலும். மேலும், சட்டம்- ஒழுங்கு பிரச்சனை மற்றும் முக்கிய பாதுகாப்பு பணியின் போது ஆய்வாளர்கள் தாங்களாக உடனடி நடவடிக்கை எடுக்க முடியும். கூடுதல் பதவியால் காவல் நிலைய பணிகள் இன்னும் சிறப்பாக நடைபெற ஏதுவாக இருக்கும். 10 வருடங்களுக்கு மேல் உதவி ஆய்வாளராகவே பணிபுரிந்த 280 உதவி ஆய்வாளர்கள் ஆய்வாளர்களாக பதவி உயர்வு பெறுவதால் அவர்கள் இன்னும் சிறப்பாக பணிபுரிய முடியும் என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.