Skip to content

கோவையில் +2 பொதுத்தேர்வை 35,712 மாணவர்கள் எழுதுகின்றனர்

கோவையில் பிளஸ்–2 பொதுத்தேர்வு தொடக்கம் – 35,712 மாணவர்கள் எழுதுகின்றனர்.

தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் சார்பில் 2025–2026 கல்வியாண்டிற்கான பிளஸ்–2 பொதுத்தேர்வு இன்று கோவை மாவட்டத்தில் தொடங்கியது. இந்தத் தேர்வு மார்ச் 26ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கோவை மாவட்டத்தில் மொத்தம் 130 தேர்வு மையங்களில் 365 பள்ளிகளைச்

சேர்ந்த 19,344 மாணவர்கள் மற்றும் 16,368 மாணவிகள் என மொத்தம் 35,712 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

இதற்கு கூடுதலாக 852 தனித்தேர்வர்களும் பங்கேற்றுள்ளனர்.

தேர்வின் முதல் நாளான இன்று பல மாணவர்கள் கோவில்களில் வழிபாடு செய்து தேர்வில் சிறப்பாக எழுத வேண்டி பிரார்த்தனை செய்தனர். நண்பர்களுடன் ஒருவருக்கொருவர் வாழ்த்துகள் தெரிவித்துக் கொண்டு உற்சாகத்துடன் தேர்வு மையங்களுக்கு சென்றனர்.

தேர்வு அமைதியாகவும் முறையாகவும் நடைபெற மாவட்ட நிர்வாகம் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

7 மண்டல கட்டுக்காப்பு மையங்களில் 14 வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள் மற்றும் ஆயுதம் ஏந்திய காவலர்கள் நியமிக்கப்பட்டு, வினாத்தாள்கள் பாதுகாப்புடன் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தேர்வு நாள்களில் 37 வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வழித்தடத்திலும் ஒரு அலுவலர் மற்றும் ஆயுதம் ஏந்திய காவலர்கள் இணைந்து வினாத்தாள்களை பாதுகாப்பாக தேர்வு மையங்களுக்கு கொண்டு சென்றனர்.

தேர்வு முடிந்தவுடன் விடைத்தாள்களும் அதே நாளில் பாதுகாப்பாக சேகரிப்பு மையங்களுக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், தேர்வை கண்காணிக்க 130 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 130 அலுவலர்கள், 2,100 அறைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் 300 நிலையான மற்றும் பறக்கும் படை அலுவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சொல்வதை எழுதும் வசதி தேவைப்படும் 343 மாணவர்களுக்கு அரசுத் தேர்வுகள் இயக்கக வழிகாட்டு நெறிமுறைகளின்படி எழுதுபவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்வர்கள் சிரமமின்றி தேர்வு மையங்களுக்கு சென்று வர போக்குவரத்துத் துறை சிறப்பு வசதிகளை செய்துள்ளது. உள்ளாட்சி அமைப்புகள் மூலம் சுகாதார வசதிகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. அவசர மருத்துவ உதவிக்காக சுகாதாரத் துறை தயார் நிலையில் உள்ளது. தேர்வு நாளில் தடையில்லா மின்சாரம் வழங்க மின்சாரத் துறையும் நடவடிக்கை எடுத்துள்ளது.

தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் வி.கே.கே. மேனன் சாலையில் அமைந்துள்ள மாணவர்கள் தேர்வு எழுதும் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வை மேற்கொண்டு எவ்வித அச்சமும் இன்றி நிதானமாகவும் கவனத்துடனும் தேர்வு எழுத மாவட்ட ஆட்சியர் மாணவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.

error: Content is protected !!