ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட இருதரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் 7 விக்கெட்கள் வித்தியாசத்திலும், சென்னையில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் 2 விக்கெட்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி கண்டிருந்தது. இதனால் இந்திய அணி டி20 தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது.
ரிங்கு சிங், நித்திஷ் குமார் ரெட்டி ஆகியோர் காயம் காரணமாக விளையாடவில்லை என்பதால் இன்றைய ஆட்டத்தில் ஷிவம் துபே அல்லது ரமன் தீப் சிங் சேர்க்கப்படக்கூடும். இது நிகழ்ந்தால் வாஷிங்டன் சுந்தர் நீக்கப்படக்கூடும். மற்றபடி அணியில் மாற்றங்கள் இருக்க வாய்ப்பு இல்லை. வேகப்பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங், கடந்த இரு ஆட்டங்களிலும் தொடக்கத்திலேயே விக்கெட் வீழ்த்தி இங்கிலாந்து அணிக்கு அழுத்தம் கொடுத்தார். மீண்டும் ஒரு முறை அவர், தொடக்க பேட்ஸ்மேன்களுக்கு சவால் தரக்கூடும். சுழலில் வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய், அக்சர் படேல் ஆகியோரும் நெருக்கடி கொடுக்க ஆயத்தமாக உள்ளனர்.
ராஜ்கோட்டில் இன்று நடைபெற 3-வது டி20 போட்டிக்கான விளையாடும் லெவனை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நேற்றே அறிவித்தது. இதில் சென்னையில் நடைபெற்ற 2-வது போட்டியில் விளையாடிய அதே வீரர்களே இடம் பெற்றுள்ளனர். எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.