Skip to content

பச்சை கடல் ஆமைகளை வேட்டையாடிய 4 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே அரசால் பாதுகாக்கப்பட்ட இனமாக அறிவிக்கப்பட்டுள்ள பச்சை கடல் ஆமைகளை வேட்டையாடி, அதன் இறைச்சியைக் கடத்த முயன்ற 4 பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

கீழக்கரை வனஉயிரின சரக அலுவலர் கௌசிகா தலைமையில் வனவர் காளிதாஸ் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் நேற்று கடலோரப் பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கீழக்கரை அப்பாத்தீவு அருகே சந்தேகத்திற்கு இடமான முறையில் ஒரு படகில் 4 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களைப் பிடித்து வனத்துறையினர் சோதனை செய்தபோது, அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின.

அவர்கள் அரசால் பாதுகாக்கப்பட்ட கடல்வாழ் உயிரினமான பச்சை நிறக் கடல் ஆமைகளை வேட்டையாடி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர்கள் கீழக்கரை பகுதியைச் சேர்ந்த சில்வஸ்டர் (30), சத்யராஜ் (35), முனியசிவா (36) மற்றும் பாலமுருகன் (25) என்பது தெரியவந்தது.

அவர்களிடமிருந்து தலா 50 கிலோ மற்றும் 30 கிலோ எடை கொண்ட, இறந்த நிலையிலிருந்த பச்சை கடல் ஆமைகளை அதிகாரிகள் மீட்டனர். பிடிபட்ட 4 பேரையும் கைது செய்த வனத்துறையினர், கீழக்கரை வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். கடல்சார் உயிரினங்களைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

error: Content is protected !!