திருக்கோவிலூர் அருகே சொகுசு காரின் டயர் வெடித்ததில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் இருந்து இன்று காலை, அயுதப்படை போலிசார் மாதவன் (44) என்பவர் தனது குடும்பத்தினர் 8 பேருடன் திருவண்ணாமலை நோக்கி விழுப்புரம் வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது அத்திப்பாக்கம் அருகே கார் சென்று கொண்டிருந்த போது காரின் டயர் வெடித்ததாக சொல்லப்படுகிறது. இதில் நிலைதடுமாறிய கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஆயுதப்படை காவலர் மாதவனின் குடும்பத்தினர் சங்கீதா(38), சுபா(55), தனலட்சுமி(70) ராகவேந்திரன்(20) என நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
மேலும் காரில் பயணம் செய்த ஆயுதப்படை காவலர் மாதவன் உட்பட மேலும், ஐந்து பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த நிகழ்விடத்திற்கு வந்த மணலூர்பேட்டை போலீசார் , விபத்தில் சிக்கிய வாகனத்தை மீட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கார் விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.