யோகா பயிற்சிக்கு சென்ற பெண்ணிடம் 4 பவுன் செயின் பறிப்பு
திருச்சி ரங்கா நகர் பகுதியைச் சேர்ந்த 64 வயது மூதாட்டி ஒருவர் யோகா மாஸ்டர் மல்லிகா என்பவருடன் சண்முகா நகர் 11- வது கிராஸ் பகுதியில் நடைபெறும் யோகா பயிற்சி வகுப்புக்கு சென்றார். ரங்காநகர் ஏழாவது கிராஸ் பகுதியில் சென்றபோது இரண்டு மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர். பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் மூதாட்டி கழுத்தில் கிடந்த நான்கு பவுன் செயினை அறுத்துக் கொண்டு தப்பி சென்றனர். மல்லிகாவும், அந்த மூதாட்டியும் திருடன் திருடன் என கத்தினர் இருந்தபோதிலும் மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டி அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து மூதாட்டி திருச்சி அரசு மருத்துவமனை போலீசில் புகார் செய்தார். அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
டூவீலர் திருடிய வாலிபர் கைது
திருச்சி நாகமங்கலம் நாராயணபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அதிசயராஜ் (வயது 46). இவர் கோட்டை இப்ராஹிம் பூங்கா அருகாமையில் உள்ள ஒரு வர்த்தக நிறுவனம் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் அந்த மோட்டார் சைக்கிளை திருடி சென்று விட்டார். இதுகுறித்து அதிசயராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில் மோட்டார் சைக்கிளை திருடிய அரியமங்கலம் உக்கடை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மோதிலால் (38 ) என்பவரை கைது செய்தனர்.
வெளிமாநில லாட்டரி விற்ற 2 பேர் கைது
திருச்சி தென்னூர் ஆழ்வார்தோப்பு காய்தே மில்லத் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முகமது அலி ( 52 ) , ஆழ்வார் தோப்பு ஜாகிர் உசேன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் எலியாகத் அலி (66) இவர்கள் இரண்டு பேரும் காயிதே மில்லத் நகர் ஜங்ஷன் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்றுக் கொண்டிருந்தனர். இது பற்றி தகவல் அறிந்த தில்லை நகர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று அவர்கள் இரண்டு பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களிடமிருந்து லாட்டரி சீட்டு நம்பர்கள் அடங்கிய காகிதத்தை கைப்பற்றினர் .மேலும் ரூபாய் 2000 பணம் மற்றும் ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

