Skip to content

ரத்தமாற்றம் செய்யப்பட்ட 5 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி. தொற்று…ஜார்க்கண்ட் அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி…

ஜார்கண்ட் மாநிலம், மேற்கு சிங்பூம் மாவட்டம், சைபாசா நகரில் உள்ள சதார் அரசு மருத்துவமனையில் தாலசீமியா நோய்க்காக சிகிச்சை பெற்று வந்த 7 வயது குழந்தைக்கு, ரத்தம் ஏற்றினர். அதன்பிறகு எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டதாக கடந்த 24ம் தேதி அக்குழந்தையின் பெற்றோர் புகார் அளித்தனர்.
இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ராஞ்சியில் இருந்து அனுப்பப்பட்ட ஐந்து பேர் கொண்ட மருத்துவக் குழுவினர், அந்த மருத்துவமனையின் ரத்த வங்கியில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில், அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் நான்கு தாலசீமியா குழந்தைகளுக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட ஐந்து பேருமே சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மருத்துவக் குழுவின் முதற்கட்ட விசாரணையில், மருத்துவமனையின் ரத்த வங்கியில் ரத்த மாதிரிப் பரிசோதனை, பதிவேடுகளைப் பராமரித்தல் மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளில் கடுமையான குளறுபடிகள் இருந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து மாவட்ட சுகாதார அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சுஷாந்தோ மஜி கூறுகையில், பாதுகாப்பற்ற ரத்தம் ஏற்றியது மட்டுமே இதற்குக் காரணம் என்று தற்போதைக்கு முடிவுக்கு வர முடியாது. பாதுகாப்பற்ற ஊசிகள் போன்ற பிற வழிகளிலும் எச்.ஐ.வி. பரவ வாய்ப்புள்ளது என்று குறிப்பிட்டார்.
இந்த மருத்துவப் அலட்சியம் தொடர்பான விவகாரத்தை ஜார்கண்ட் உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளதுடன், மாநில சுகாதாரத் துறைச் செயலாளர் மற்றும் மாவட்ட சுகாதார அதிகாரியிடம் அறிக்கை கேட்டுள்ளது. மேலும், இந்த விவகாரம் குறித்து முழுமையான விசாரணை நடத்த மாநில சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

error: Content is protected !!