குஜராத் மாநிலம் வல்சாட் நகரில் உள்ள அவுரங்கா ஆற்றின் மீது பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. வல்சாட் நகரை அருகில் உள்ள கிராமங்களுடன் இணைக்கும் வகையில் சுமார் 700 மீட்டர் நீளத்திற்கு, ரூ.42 கோடி மதிப்பீட்டில் இந்த பாலம் கட்டப்பட்டு வருகிறது. பாலத்தின் கட்டுமானப் பணியை அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று வழக்கம்போல் பாலத்தின் கட்டுமானப் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக பாலத்தின் இரண்டு தூண்களுக்கு இடைப்பட்ட பகுதி இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 5 ஊழியர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
இந்த விபத்தில் நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என வல்சாட் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். பாலத்தில் பொருத்தப்பட்டிருந்த கம்பியில் ஏற்பட்ட சேதத்தால் இந்த விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

