சென்னையை அடுத்த பூந்தமல்லி பேருந்து நிலையம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்பட உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பூந்தமல்லி மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் சுபாஷினி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு சோதனை செய்தனர். அப்போது கையில் கட்டப்பையுடன் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் அவரது பையை சோதித்த போது அதில் சுமார் 5 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்ற போலீசார், விசாரணையில் அவரது பெயர் ஷஃபீக் என்றும் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் எனவும் தெரிந்து கொண்டனர். ஆந்திராவில் கஞ்சாவை வாங்கி வந்து பூந்தமல்லி சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனை செய்ய இருந்ததையும் கண்டறிந்தனர். பின்னர் அவரை பூந்தமல்லி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
