இந்திய குடியரசு தின விழா வரும் ஜனவரி 26-ம் தேதி நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தில் குடியரசு தின விழாவை ஒட்டி, சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியேற்றி சிறப்பிக்க உள்ளார். இதனையொட்டி சென்னை மாநகர் முழுவதும், குறிப்பாகக் காமராஜர் சாலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை பெருநகர காவல் ஆணையாளரின் உத்தரவின் பேரில், கூடுதல் ஆணையாளர்கள் மற்றும் இணை ஆணையாளர்களின் மேற்பார்வையில், மொத்தம் 7,500 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக சென்னை விமான நிலையம், ரயில் நிலையங்கள், பேருந்து முனையங்கள், வணிக வளாகங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். நகரின் முக்கிய நுழைவு வாயில்களான மாதவரம், மீனம்பாக்கம், மதுரவாயல் உள்ளிட்ட இடங்களில் தற்காலிகச் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர வாகனத் தணிக்கை நடைபெற்று வருகிறது. விடுதிகள் மற்றும் ஓட்டல்களில் தங்கியிருப்பவர்களின் விவரங்களைச் சேகரித்து வரும் போலீசார், சந்தேகப்படும்படியான நபர்கள் குறித்துத் தகவல் தெரிவிக்க அறிவுறுத்தியுள்ளனர். மேலும், வெடிகுண்டு கண்டறியும் பிரிவு மற்றும் மோப்பநாய் பிரிவினர் மக்கள் கூடும் இடங்களில் தொடர் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முக்கிய அறிவிப்பாக, ஜனவரி 25 மற்றும் 26 ஆகிய இரண்டு தினங்களுக்கு மெரினா கடற்கரை, ராஜ் பவன் மற்றும் முதல்வர் இல்லத்திலிருந்து மெரினா செல்லும் வழித்தடங்கள் ‘சிவப்பு மண்டலமாக’ (Red Zone) அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழிப் பொருட்கள் பறக்கவிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையை மீறுபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனச் சென்னை பெருநகர காவல்துறை எச்சரித்துள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

