கோவை, பொள்ளாச்சியை உடுமலை சாலையில் அமைந்துள்ள விஸ்வதீப்தி தனியார் பள்ளியில் 50 ஆவது ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாக 222 மாணவர்கள் பங்கேற்ற மாபெரும் சிலம்பம் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெறுகிறது.சோழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அமைப்பின் உலக சாதனைக்காக தொடர்ந்து இன்று மதியம் முதல் 50 மணி நேரம்,50 நிமிடம் 50 நொடி என தொடர்ந்து விடாமல் , பலரும் ஒன்றிணைந்து சிலம்பம் சுற்றும் நிகழ்ச்சி சனிக்கிழமை மாலை வரை நடைபெறுகிறது. இதில் 5வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் உள்ளிட்ட மாணவர்கள் பெற்றோர்கள், ஆசிரியர்கள் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டு இந்த சாதனை நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
உலக சாதனைக்காக சோழன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அமைப்பிலிருந்து 5 பேர் கொண்ட குழு தொடர்ந்து இந்த சிலம்பம் சாதனை முயற்சியை கண்காணித்து சான்றிதழ் வழங்க உள்ளனர். 2 நாட்களுக்கு மேல் தொடர்ந்து நிகழ்ச்சி நடைபெறுவதால் சக மாணவர்கள் இந்த சாதனை முயற்சியில் ஈடுபட்டவர்களுக்கு உற்சாகமளித்து வருகின்றனர்.வளரும் இளம் தலைமுறையினருக்கும், மாணவர்களுக்கும் சிலம்பம் தற்காப்பு கலை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், தனி மனிதர்கள் தங்களை தற்காத்துக் கொள்ள சிலம்பம் கற்றுக் கொள்வதன் அவசியம் குறித்து விளக்கும் வகையில் இந்த சாதனை முயற்சி ஏற்பாடு செய்யப்பட்டதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.