திருச்சி ஏர்போட்டிலிருந்து இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், துபாய், வியட்நாம் , தோஹா உள்ளிட்ட முக்கிய வெளிநாடுகளுக்கும், அதே போன்று பெங்களூர், சென்னை, டெல்லி திருவனந்தபுரம் உள்ளிட்ட இந்திய நகரங்களுக்கும் உள்நாட்டு விமான சேவை விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. சர்வதேச நாடுகளில் இருந்து விமானத்தில் வரும் பயணிகள் சட்டவிரோதமாக கடத்தலில் ஈடுபடுவதும் அதை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர் கதையாக இருந்து வருகிறது..மேலும் இந்த நிலையில் திருச்சி விமான நிலையத்தில் தொடர்ந்து உயிரினங்கள், வெளிநாட்டு பணம், தங்கம் ,போதை பொருள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் கடத்தி வரப்பட்டு வருகிறது. தினந்தோறும் நடக்கும் இந்த கடத்தலை தடுப்பதற்கு சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தீவிர நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்கள்.
வெளிநாடுகளில் இருந்து திருச்சிக்கு ஆமை குஞ்சுகளை கடத்தி வருவதாக விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது இந்த தகவலின் அடிப்படையில் விமான நிலையம் முழுவதும் பயணிகள் உடைமைகளை அதிகாரிகள் அதிரடியாக சோதனை ஈடுபட்டனர்
இந்த நிலையில் சிங்கப்பூரிலிருந்து ஸ்கூட் விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்த மலேசியாவை சேர்ந்த 2 பேர் கடத்தி வந்த 5061 ஆமை குஞ்சுகளை திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் ஆமை குஞ்சுகளை கடத்தி வந்து 2 பேரிடமும் விசாரணை செய்து வருகின்றனர்.
சமீப காலமாகத் திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் தங்கம் கடத்தல் வெளிநாட்டு கரன்சிகள் பறவைகள், பாம்புகள் உயிரினங்கள் கடத்தி வரும் சட்ட விரோதமான செயல்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு தான் வருகிறது.
சுங்கத்துறை அதிகாரிகள் கடுமையான சோதனையில் ஈடுபட்டாலும் பயணிகள் “குருவி” என்ற போர்வையில் தொடர்ந்து கடத்தலில் ஈடுபட்டு வரும் சம்பவம் வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. எனவே கடத்தலில் ஈடுபட்டு பிடிபடுபவர்கள் மீது வருங்காலத்தில் விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றன.

