போதை மாத்திரைகள், விற்ற வாலிபர் அதிரடி கைது
திருச்சி மாநகரில் கஞ்சா, லாட்டரி, போதை மாத்திரைகள் மற்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து கோட்டை, காந்தி மார்க்கெட், உறையூர், பொன்மலை, அரியமங்கலம், பாலக்கரை, கண்டோன்மென்ட் ,கே.கே.நகர், எடமலைப்பட்டி புதூர் ஆகிய பகுதிகளில் அந்தந்த போலீச இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் லாட்டரி விற்றதாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து பணம் மற்றும் லாட்டரி விற்றதற்கான ஆவணங்களும் சிக்கின. இதேபோல் கஞ்சா விற்றதாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.இதேபோல் திருச்சி செங்குளம் காலனி சர்க்யூட் ஹவுஸ் பகுதியில் இளைஞர்களுக்கு தீங்கிழைக்கும் போதை மாத்திரைகள் விற்றதாக கல்லுக்குழியைச் சேர்ந்த வாலிபர் கோகுல் (வயது 23) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள 100 மில்லி கிராம் எடை கொண்ட 350 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், திருச்சி கே.கே.நகர் போலி சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், விமல். கூலிப் உள்ளிட்ட போதை பொருட்கள் விற்றதாக சுப்ரமணியபுரம் ரஞ்சிதபுரத்தைச் சேர்ந்த சௌந்தரபாண்டியன் (வயது 71 ) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரது பெட்டிக்கடையில் இருந்து 4 1/4 கிலோ மதிப்புள்ள போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. எடமலைப்பட்டி புதூர் பகுதியில் சூதாட்டம் ஆடியதாக மூன்று வாலிபர்கள் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். அவர்களிடமிருந்து பணம், சீட்டு கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
சி.சி.டி.வி கேமராவை சேதப்படுத்தி ரகளை.. 2 ரவுடிகள் உள்பட 3 கைது
திருச்சி திருவானைக்காவல் பகுதியில் திருவரங்கம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் ரோந்து சென்று கொண்டிருந்தனர் .அப்போது அங்கு நின்ற 4 வாலிபர்கள் ஆபாச வார்த்தைகளால் திட்டி, பொது இடத்தில் மக்களுக்கு இடையூறு செய்ததுடன், சி.சி.டி.வி கேமராவை அடித்து சேதப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவி கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவரங்கம் போலீசார் வழக்கு பதிந்து டெங்கு மணி, கவியரசன், முருகானந்தம் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். பின்னர் இவர்கள் நீதிமன்ற ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். சொக்கலிங்கம் என்பவரை தேடி வருகின்றனர்.இதில் கைது செய்யப்பட்ட டெங்கு மணி, கவியரசன் ஆகியோர் ரவுடி பட்டியலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தூங்கிகொண்டிருந்த பெண்ணிடம் 4 1/4 சவரன் நகை பறிப்பு
திருச்சி பொன்மலை கணேசபுரம் புது தெருவை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 65). இவர் தனது வீட்டில் மனைவியுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க வழியாக கதவைத் திறந்து வீட்டிற்குள் நுழைந்தனர்.அப்போது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கந்தசாமியின் மனைவி கழுத்தில் கிடந்த 4 1/4 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துவிட்டு நைசாக தப்பி ஓடிவிட்டார்கள். இதுகுறித்து கந்தசாமி கொடுத்த புகாரின் பேரில் பொன்மலை போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரச்சோலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கூலித் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
திருச்சி மேலப்பஞ்சபூர் காலனி தெருவை சேர்ந்தவர் ராமன். இவரது மகன் விஜயகுமார் (வயது 27 ) கூலித்தொழிலாளி. குடிபோதைக்கு அடிமையானவர். திருமணமாகவில்லை. இந்நிலையில் மன உளைச்சலில் இருந்து வந்த விஜயகுமார் வீட்டில் யாரும் இல்லாத போது சேலையால் உத்திரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தாய் தமிழரசி கொடுத்த புகாரின் அடிப்படையில் எடமலைப்பட்டிபுதூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.