தலைநகர் டெல்லியில் செங்கோட்டை அருகே கடந்த 10ம் தேதி கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த கார் குண்டு வெடிப்பு தொடர்பாக 8 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே இந்த தாக்குதல் தொடர்பாக பரிதாபாத்தில் போலீசார் நடத்திய சோதனையில் 360 கிலோ வெடிமருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தை சேர்ந்த முகமில் ஷகீல் கனியா என்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்களை விசாரணைக்காக ஜம்மு காஷ்மீரின் நவ்காம் போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில் வெடிபொருட்களை ஆய்வு செய்துக் கொண்டிருந்தபோது திடீரென அந்த வெடிபொருட்கள் வெடித்ததால் தடயவியல் குழு, போலீசார் என 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவத்தில் 27க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே பயங்கரவாத தாக்குதலில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தநிலையில், மீண்டும் வெடிபொருள் வெடித்து 9 பேர் பலியாகி உள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

