Skip to content

போதைப்பொருள் வழக்கில் தமிழ் சினிமா நடிகை உட்பட 9 பேர் கைது

போதைப் பொருள் தடுப்புப் பிரிவு காவல்துறையினருக்கு வளசரவாக்கம் பகுதியில் போதைப்பொருள் பயன்படுத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், போலீசார் அப்பகுதியில் நடத்திய விசாரணையில், முதலில் நெசப்பாக்கத்தை சேர்ந்த விக்னேஸ்வரன் (35) என்ற இளைஞரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

அந்த போதைப்பொருளை கோபாலபுரத்தை சேர்ந்த வெங்கடேஷ்குமார் (31) என்பவர் வழங்கியதாக விக்னேஸ்வரன் தெரிவித்ததை அடுத்து, போலீசார் அவரையும் கைது செய்தனர். இதன்பின் போலீசாரின் தொடர் விசாரணையில், திரைப்பட நடிகை அஞ்சு கிருஷ்ணா (30) கைது செய்யப்பட்டார்.

இவருடன் தமிழ் திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்து வரும் வின்சி என்கிற நிவேதா (26), பெரியபணிசேரியை சேர்ந்த கார்த்திக் ராஜா (31), காட்டுப்பாக்கத்தை சேர்ந்த எஸ்வந்த் (25), மேற்கு மாம்பலத்தை சேர்ந்த ஸ்ரீராம் (33), கோவிலம்பாக்கத்தை சேர்ந்த அல்பின்சா (27), சென்னை மண்ணடியை சேர்ந்த தமிம் நிஸ்வான் (27) ஆகிய 7 பேரும் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட 9 பேரும் பூந்தமல்லி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து மெத்தபெட்டமைன், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள், 9 செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்டுள்ள நடிகை அஞ்சு கிருஷ்ணா ‘ஓம் வெல்லமலை’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

முன்னதாக கடந்த வருடம் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாக இந்த வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இதனிடையே போதைப்பொருள் வழக்கில் மேலும் ஒரு திரைப் பிரபலம் கைது செய்யப்பட்டுள்ளது சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!