90களில் மெஹா ஹிட் கொடுத்த இயக்குநர்கள் மற்றும் கனவுக்கன்னியாக வலம் வந்த நடிகைகள் என பலரும் கோவாவில் ஒன்று கூடியிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 80கள், 90களில் பிரபலமாக இருந்த தென்னிந்திய நடிகர், நடிகைகள் ஒவ்வொரு ஆண்டும் ஓர் இடத்தை தேர்வு செய்து அங்கு சந்தித்து கொள்வதை வாடிக்கையாக வைத்து வருகின்றனர். அதற்கென்று ஒன்றாக சேர்ந்து ஒரு ஆடையை தேர்வு செய்து வருவர்.
அந்த வகையில் அவர்கள் தற்போது தேர்ந்தெடுத்திருக்கும் இடம் கோவா. நடிகர்கள், நடிகைகள் மற்றும் இயக்குநர்கள் அனைவரும் வெள்ளை நிற
ஆடையை தேர்வு செய்து இந்த சந்திப்பை நிகழ்த்தியுள்ளனர். கடந்த முறை போன்று இதுவும் அழகான தருணமாக மாறியுள்ளது. நட்சத்திரங்கள் நிறைந்த இந்த விருந்தினர் பட்டியலில், மூத்த இயக்குநர்களான கே.எஸ். ரவிக்குமார், ஷங்கர், லிங்குசாமி, மோகன் ராஜா மற்றும் பிரபு தேவா, ஜெகபதி பாபு ஆகியோர் உள்ளனர்.
அதேபோன்று முன்னணி நடிகைகளான மீனா, சங்கவி, மகேஸ்வரி, மாளவிகா, சங்கீதா, ரீமாசென், சிம்ரன், சிவரஞ்சனி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். மேலும், நடிகைகள் அனைவரும் சேர்ந்து நடனமாடும் ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. முன்னதாக இதேபோன்று 80ஸ் ஹீரோ மற்றும் ஹீரோயின்கள் கலந்துகொண்டதில் நடிகர் சிரஞ்சீவி, ராதா, அம்பிகா, சுரேஷ் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டது வைரலானது. அதில், அனைவரும் கருப்பு நிற ஆடைகள் அணிந்து தங்களது அன்பை பகிர்ந்துகொண்டிருந்தனர். நடிகர்கள் பலரும் பிஸியாக இருக்கும் இந்த வேளையில் நடிகைகள் மற்றும் நடிகர்கள் இணைந்திருப்பது மகிழ்ச்சியாக இருப்பதாக பகிர்ந்திருக்கின்றனர். இதுதொடர்பான வீடியோவும் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.