சென்னை, தாம்பரம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேசனில் எஸ்ஐ பணிபுரிபவர் ரமா பிரபா. இவர் பணி முடிந்து வீட்டுக்கு தனது டூவீலரில் வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலை அருகே விபத்தாகியுள்ளது. இதில் பலத்த காயம் ஏற்பட்டதால், உடன் பணிபுரியும் பெண் ஏட்டு ஷீலா ஜெபமணியை (51) உதவிக்கு அழைத்துள்ளார். உடனே எதையும் யோசிக்காத ஜெபமணி ஏட்டு சென்றுள்ளார். விபத்தான பகுதிக்கு அருகே செல்லும்போது, ஜெபமணி வாகனத்தின் மீது பின்னால் வந்த கார் அசுர வேகத்தில் மோதி உள்ளது. இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். தலையில் பலத்த காயமடைந்து சுயநினைவற்று கிடந்துள்ளார். அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கே தலையில் 7 தையல்கள் போட்டும், மயக்க நிலையிலேயே இருந்துள்ளார்.
நிலைமை மோசமானதால் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இவ்விபத்து தொடர்பாக குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர். விசாரணையின் முடிவில் கார் டிரைவர் பல்லாவரத்தைச் சேர்ந்த சக்தியை (41) கைது செய்தனர். இந்த விபத்தில் சிக்கிய பெண் எஸ்ஐ-யை பார்க்க சென்ற பெண் ஏட்டு விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சென்னையில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.