ஜார்க்கண்ட் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இதனையடுத்து அவர் பதவி விலகினார். அதேபோல், டில்லி முதல்வர் கெஜ்ரிவாலும் கைதாகி டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இதனைக் கண்டித்து ஜார்க்கண்டில் ‛இண்டியா’ கூட்டணி சார்பில் ராஞ்சியில் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், ராகுல்காந்தி, கெஜ்ரிவால் மனைவி சுனிதா, ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா, காங்கிரஸ் தலைவர் கார்கே, ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத், தேசிய மாநாட்டு கட்சியின் பரூக் அப்துல்லா, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக அவர்கள் ராஞ்சி வந்தனர். இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி., ராகுல் இப்பேரணியில் பங்கேற்க மாட்டார் என அக்கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக டில்லியை விட்டு அவரால் செல்ல முடியாது எனக்கூறினார். இதனால் காங்., சார்பில் மல்லிகார்ஜூன கார்கே பங்கேற்றார்.
