தெலுங்கானாவில் வரும் 13ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. நிசாமாபாத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஜீவன் ரெட்டி என்பவர் போட்டியிடுகிறார். இவர், அர்மூர் பகுதியில், கட்சியினருடன் சேர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டார். தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ஈடுபட்ட பெண்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.
அப்போது அங்கிருந்த பெண் ஒருவர், சட்டசபை தேர்தலின் போது காங்கிரசுக்கு தான் ஓட்டுப் போட்டேன். ஆனால், எனக்கு வர வேண்டிய பென்சன் இன்னும் கிடைக்கவில்லை. இதனால், வரும் தேர்தலில் பா.ஜ.,விற்கு தான் ஓட்டுப் போடுவேன் என்றார். இதனால், கோபமடைந்த ஜீவன் ரெட்டி, அந்த பெண்ணின் கன்னத்தில் அறைந்தார். இந்நிகழ்வு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
