Skip to content

என்றைக்காவது ஒருநாள் காமராஜர் ஆட்சி என்று தான் கூறினேன்.. செல்வப்பெருந்தகை அறிக்கை..

  • by Authour

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று வெளியிட்டுள்ள அறிக்கை.. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட இண்டியா கூட்டணி புதுச்சேரி உட்பட நாற்பது தொகுதிகளிலும் வெற்றி பெற்றதை கொண்டாடுகிற வகையில், வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கவும், வெற்றிக்காக பாடுபட்ட தலைவர்களுக்கு நன்றி தெரிவிக்கவும், காங்கிரஸ் இயக்கத்தை எப்படி வலிமைப்படுத்துவது என்பது குறித்தும் விவாதிப்பதற்காகவும் நேற்று (11.6.2024) சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் எனது தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. தொடக்கத்தில் ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், தமிழக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிற முதல் தீர்மானத்தில், ‘கடந்த மக்களவை தேர்தலில் மகத்தான வெற்றி பெற கூட்டணிக்கு தலைமையேற்று கடுமையாக உழைத்து பரப்புரை மேற்கொண்ட தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட இண்டியா கூட்டணி கட்சி தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும், வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கும் இப்பொதுக்குழு கூட்டம் மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறது” என்று தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம், தமிழகத்தில மகத்தான வெற்றி பெறுவதற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் பங்களிப்பு தீர்மானத்தின் மூலம் உறுதிபடுத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து நான் பேசும் போது, ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நோக்கம் இருக்கிறது. அதை அடைவதற்கு இலக்கும் இருக்கிறது. அதைப்போல, காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்துவதற்கு நமக்கு கிடைத்த கருத்தியல் தான் காமராஜர் ஆட்சி என்று குறிப்பிட்டேன். இன்று இல்லாவிட்டாலும் என்றைக்காவது ஒருநாள் காமராஜர் ஆட்சி என்கிற நமது கனவு மெய்ப்பட வேண்டுமென்றால் இன்றிலிருந்து அதற்கான உழைப்பை செலுத்தி நமது இயக்கத்தை வலிமைப் படுத்த வேண்டும். அதற்கு ஏற்ற வகையில் இங்கு உரையாற்றுபவர்கள் கருத்துகளை கூற வேண்டுமென்று கூறினேன்.

ஆனால், எனக்கு பின்னால் உரையாற்றியவர்கள் கூறிய சில கருத்துகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு நாளேடுகளில் செய்திகளாக வெளி வந்துள்ளன. பொதுக்குழுவின் நோக்கம் என்பது காங்கிரஸ் இயக்கத்தை வலிமைப்படுத்துவது தான். அதே நேரத்தில், காங்கிரஸ் பங்கேற்றிருக்கிற கூட்டணியின் தலைமைப் பொறுப்பில் இருக்கிற மு.க. ஸ்டாலினின் கடுமையான உழைப்பையும், வெற்றிக்கான அவரது பங்களிப்பையும் எப்பொழுதுமே மதிக்க தவறியதில்லை. அவரது பங்களிப்பில்லாமல் நாற்பது தொகுதிகளிலும் வெற்றி பெறுவது சாத்தியமே இல்லை என்பதை எவரும் மறுக்க முடியாது. சட்டப் பேரவையில் எனது உரைகள் அனைத்துமே தி.மு.க. தலைமையிலான ஆட்சிக்கு உற்ற துணையாகவும், எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை முறியடிக்கிற வகையிலும் அமைந்துள்ளதை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். காங்கிரஸ் இயக்கத்தை வலிமைப்படுத்துவது இண்டியா கூட்டணியை வலிமைப்படுத்துவதாகும். இந்நிலையில், வெளிப்படைத்தன்மையோடு நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் பேசிய கருத்துகளை சில ஊடகங்கள் திரித்து வெளியிட்டிருப்பது மிகுந்த வேதனைக்குரியதாகும்.

தலைவர் ராகுல் காந்திக்கும், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் இடையே இருக்கிற கொள்கை சார்ந்த இணக்கத்தின் காரணமாகவே இண்டியா கூட்டணி தமிழக மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்த இணக்கம் என்பது உண்மையான உணர்வின் அடிப்படையிலானது. இந்தியாவிலேயே தமிழகத்தில் பா.ஜ.க. காலூன்ற முடியாமல் இருப்பதற்கு காரணம், இரு தலைவர்களிடையே இருக்கிற கொள்கை சார்ந்த இணக்கமான உறவு தான். அதனால் தான் தமிழகத்தில் மகத்தான வெற்றியை இண்டியா கூட்டணியால் பெற முடிந்தது.

எனவே, தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி என்பது கொள்கை சார்ந்த கூட்டணியே தவிர, சந்தர்ப்பவாத கூட்டணி அல்ல. கடந்த 2003 இல் தொடங்கிய இக்கூட்டணி ஒரு தேர்தலை தவிர, அனைத்து தேர்தல்களிலும் கூட்டணியாகவே தேர்தல் களத்தை சந்தித்திருக்கிறோம். எஃகு கோட்டை போல் இருக்கும் இக்கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த எவர் முயற்சி செய்தாலும் அது நிச்சயம் நிறைவேறாது என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!