மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஐந்து நாட்களாக பெய்த பருவம் தவறிய தொடர் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சம்பா, தாளடி பயிர்களில் சுமார் 34,000 ஏக்கர் நெற்பயிர்கள் வயலோடு சாய்ந்து சேதமடைந்தன. மழைநீர் வயலில் தேங்கி நின்றதால் பல்வேறு இடங்களில் நெற்பயிர்கள் முளைக்கவும் தொடங்கிவிட்டது. மேலும், மாவட்டம் முழுவதும் சுமார் 51 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள உளுந்து, பயறு வகை பயிர்களில் சுமார் 38 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் முழுமையாக நீரால் சூழப்பட்டு சேதம் அடைந்துள்ளது. பயிர் சேத பாதிப்புகளை தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் பேரில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் இன்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை வில்லியநல்லூர் அருகே நாராயணமங்கலம் என்ற இடத்தில் அமைச்சர் தலைமையில் வேளாண்மை உற்பத்தி ஆணையர் சமயமூர்த்தி, வேளாண் இயக்குனர் அண்ணாதுரை ஆகிய அதிகாரிகள் அடங்கிய குழுவினர் இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். ஆய்வின்போது பயிர் சேதங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்த புகைப்படங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை அமைச்சர் ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக 7 மாவட்டங்களில் ஒரு லட்சத்து 27 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டது. பாதிப்பு விவரங்கள் இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டு நாளை முதலமைச்சரிடம் தெரிவிக்க உள்ளோம். 33 சதவீதத்துக்கு மேல் நெல் பாதிப்புகள் இருந்தால் அதற்கான நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும். 97 சதவீத விவசாயிகள் நெல்லுக்கான பயிர்காப்பீட்டுத் தொகையை செலுத்தியுள்ளார்கள். நெல்லின் ஈரப்பதத்தை 22% ஆக உயர்த்தி அறிவிக்க தமிழக முதல்வர் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளார். அறிவிப்பு வந்தவுடன் நெல்லின் ஈரப்பதத்தை உயர்த்தி கொள்முதல் செய்யப்படும் என்றார்.
