திருச்சியில் இருந்து யாழ்ப்பாணம், மும்பைக்கு தினசரி விமான சேவை மார்ச் 30-ந்தேதி முதல் தொடங்க உள்ளதாக திருச்சி எம்.பி, துரை வைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து மதிமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி மக்களவை தொகுதி எம்பியுமான துரை வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது;
கடந்த 14.2.2025 அன்று டெல்லியில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான போக்குவரத்து நிறுவன அலுவலகத்தில் அந்நிறுவன அதிகாரிகளை சந்தித்து, திருச்சிக்கு மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு உள்நாட்டு போக்குவரத்து தொடங்க வேண்டுமென நான் கேட்டிருந்ததையொட்டி மார்ச் 30 முதல் திருச்சி – மும்பை நேரடி விமான சேவை தொடங்கப்பட உள்ள அறிவிப்பை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதற்குரிய முன் பதிவு தொடங்கப்பட்டுள்ளது என்ற நற்செய்தியையும் தங்களுடன் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
இந்த தினசரி திருச்சி – மும்பை விமான போக்குவரத்து இரவு 10:30 மணிக்கு மும்பையில் இருந்து புறப்பட்டு இரவு 12:35க்கு திருச்சியை வந்தடையும். மீண்டும் திருச்சியில் இருந்து நள்ளிரவு 01:05 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 3:10க்கு மும்பையை சென்றடையும்.
மும்பையிலிருந்து பல வெளிநாட்டு விமானங்கள் அதிகாலையில் புறப்படுவதால் அதை இணைக்கும் படி இந்த திருச்சி – மும்பை விமான சேவை நள்ளிரவு பயணமாக திட்டமிடப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்துகொள்கிறேன்.
அதுபோல, மார்ச் 30 முதல் திருச்சி – யாழ்ப்பாணம் இண்டிகோ விமான சேவை தொடங்கப்படவுள்ள அறிவிப்பை அந்நிறுவனம் நேற்று முன்தினம் வெளியிட்டுள்ளது. அதற்குரிய முன் பதிவும் தொடங்கப்பட்டுள்ளது.
திருச்சி – யாழ்ப்பாணம் விமான போக்குவரத்து ஈழத் தமிழர்களின் பொருளாதார வளர்ச்சிக்கும், தாயகத் தமிழர்களின் வியாபார முன்னேற்றத்திற்கும், இருபுறத் தமிழர்களுக்கும் இடையிலான கலாச்சார தொடர்பு மேம்படவும் உதவும்.இதுபோல இன்னும் பல உள்நாட்டு வெளிநாட்டு விமான போக்குவரத்து சேவையை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனமும், இண்டிகோ நிறுவனமும் தொடர்ந்து நமது திருச்சிக்கு வழங்கும் என்று நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். அதற்கான எனது முயற்சியை தொடர்ந்து மேற்கொள்வேன்.
அனைத்து தரப்பு மக்களும் பயன் பெறும்படி திருச்சி தொகுதி வளர வேண்டும் என்பதே என் ஒரே இலக்கு. அதை நோக்கியே எனது பயணம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.