.உலக கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் கடந்த 21ம் தேதி இயற்கை எய்தினார். அவரது மறைவுக்கு உலகத்தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசு சார்பில் இரங்கல் தீர்மானம் ஒன்றையும் நிறைவேற்றிய பின் மன்ற உறுப்பினர்கள் அனைவரும் இரண்டு நிமிடம் எழுந்து நின்று மௌன அஞ்சலி செலுத்தினார்கள்.
அத்துடன் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் இனிகோ எஸ். இருதயராஜ் ஆகிய இருவரையும் ரோம் நகர் வாடிகன் சென்று தமிழ்நாடு அரசின் சார்பில் நேரிடையாக அஞ்சலி செலுத்தி வருமாறு உத்தரவிட்டார். அந்த உத்தரவினை ஏற்று, அமைச்சர் சா.மு.நாசர், சட்டமன்ற உறுப்பினர் இனிகோ எஸ். இருதயராஜ் ஆகிய இருவரும் ரோம் நகர் சென்று வாடிகனில் நேற்று (25.04.2025) (வெள்ளிக்கிழமை ) நடைபெற்ற கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் திருத்தந்தை போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசின் சார்பில் பங்கேற்று இறுதி அஞ்சலி செலுத்தினர்.